வாட்ச் பழுது.. பேப்பரை தா! 1 மணி நேரத்திற்கு முன்பே பிடுங்கிய விஜிலேட்டர்! கதறிய குரூப் 2 தேர்வர்கள்
சென்னை : தேர்வறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதானதால், 15 தேர்வர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை எழுதி முடித்த அவலம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாடு அரசில் குரூப் 2, 2ஏ பிரிவில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு நேற்று முன்தினம் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.
நாய் உணவை டேஸ்ட் பார்த்து சொன்னால் ரூ.5 லட்சம்.. சோறு போட்டு கை நிறைய சம்பளமும் கொடுக்கும் நிறுவனம்!
200 கேள்விகளுக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், பழுதான வாட்சை பார்த்து தேர்வு அறை கண்காணிப்பாளர் 2 மணி நேரத்திலேயே தேர்வை முடிக்க வைத்த அவலம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
சென்னை பரங்கிமலையில் உள்ள தேர்வு மையத்தில் பல அறைகளில் தேர்வு நடைபெற்ற நிலையில், ஒரு அறையில் அறைக் கண்காணிப்பாளராக பணியில் இருந்த நபரின் கைக்கடிகாரம் ஒரு மணி நேரம் வேகமாக செயல்பட்டதன் காரணமாக 12.30 மணிக்கு முடிக்க வேண்டிய தேர்வை 11.30 மணிக்கே 15 தேர்வர்கள் முடித்துள்ளனர்.

கண்காணிப்பாளரின் அஜாக்கிரதை
தேர்வறை கண்காணிப்பாளர் தனது கைக்கடிகாரத்தில் 11 மணிக்கு பதில் 12 மணி என்று பார்த்துவிட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க வேண்டும் என்று தேர்வர்களை கட்டாயப்படுத்தியதால், அள்ளித்தெளித்த அவசர கோலத்தில் அரை மணி நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் ஏனோதானோவென்று பதிலளித்துள்ளனர் 15 தேர்வர்கள்.

கடிகாரத்தால் பிரச்சினை
பின்னர் அருகாமையில் உள்ள அறைகளில் தேர்வு எழுதியவர்கள் ஏன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று அந்த தேர்வறை கண்காணிப்பாளர் விசாரித்து விட்டு, பின் தன் அறையில் தேர்வெழுதிய தேர்வர்களிடம் ஐயோ மன்னித்துவிடுங்கள், இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது, எனது கைக்கடிகாரம் பழுதாகிவிட்டது, தொடர்ந்து எழுதுங்கள் என்று கூறியிருக்கிறார்.

தேர்வர்கள் அதிர்ச்சி
ஆனால் OMR தாளில் அவசர கோலத்தில் ஏற்கனவே விடைகளை குறிப்பிட்டுவிட்ட 15 தேர்வர்களும், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்மந்தப்பட்ட அறையில் தேர்வெழுதிய 15 தேர்வர்கள் சென்னை பூங்கா நகரில் உள்ள TNPSC அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். தேர்வறை கண்காணிப்பாளரின் தவறால் 100 கேள்விகளுக்கு தவறாக விடையளித்துள்ளதாகவும், தங்களின் 3 ஆண்டுகால உழைப்பு வீணாகிவிட்டதாகவும், தங்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் என்றும் 15 தேர்வர்களும் கடிதம் மூலம் தேர்வாணையத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

மன்னிப்பு கடிதம்
தேர்வர்களின் கடிதம் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் உறுதியளித்துள்ளார். இதனிடையே, கைகடிகாரம் பழுதானதால் தவறிழைத்துவிட்டதாகக் கூறி அந்த தேர்வறை கண்காணிப்பாளரும் மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவரான தென்னரசு என்பவரிடம் பேசிய போது, " தேர்வறை கண்காணிப்பாளரின் அஜாக்கிரதை காரணமாக தங்களது பல ஆண்டுகால உழைப்பு வீணாகியுள்ளது. இதுகுறித்து தேர்வாணைய கூட்டத்தில் முழுமையாக விசாரித்து அதன் பின்னர் முடிவு எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு" என கூறினார்.