• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உபரி தண்ணீருக்கும் வம்பிழுக்கும் கர்நாடகா.. வாய் திறக்காத தமிழக தலைவர்கள்.. வேதனையில் விவசாயிகள்

|

சென்னை: காவிரி குண்டாறு திட்டத்திற்கு கர்நாடகாவில் கட்சி பேதம் இல்லாமல், ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் வரை ஓரணியில் திரண்டுள்ளனர்.

ஒருபடி மேலே போய்.. தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திபள்ளிக்கே வந்து போராட்டம் நடத்தி 'மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்' கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவரான வாட்டாள் நாகராஜ்.

இத்தனை அமளி, ஆரவாரங்களுக்கு இடையேயும், தமிழகத்திலிருந்து பதிலுக்கு ஒரு குரலும் இதுவரை வெளியாகவில்லை. ஒருவித கனத்த மவுனம் காக்கப்படுகிறது.

தமிழக அரசு பதில்

தமிழக அரசு பதில்

காவிரி குண்டாறு திட்டத்தால் அரசியல் ரீதியாக அதிக பலன் அதிமுகவுக்குத்தான் செல்லும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில், இது திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயிகளுக்கு நலன் கொடுக்கும் திட்டமாகும். எனவே அந்த மாவட்டங்களில் அதிமுகவுக்கு கொஞ்சம் ஆதரவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஆளும் தரப்பில் இருந்து கூட இதுவரை கர்நாடக முதல்வரின் எச்சரிக்கைக்கு பதில் கொடுக்கப்படவில்லை.

அடிக்கல் போதுமா

அடிக்கல் போதுமா

காவிரி குண்டாறு திட்டத்திற்காக காவிரி நதியின் உபரி தண்ணீரை பயன்படுத்தக் கூடாது. சட்ட நடவடிக்கை எடுப்போம் என்கிறார் எடியூரப்பா. "சட்டப்படி சந்திப்போம்" என்று கூட தமிழகத்திலிருந்து எந்த தலைவர்களிடமும் சத்தம் எழவில்லை. இந்த திட்டத்தை சீரியசாகவே செயல்படுத்த விருப்பம் இருக்கிறதா, அல்லது வெறும் அடிக்கல் நாட்டு விழாவோடு மறந்துபோகக் கூடியதா என்ற சந்தேகத்தை இந்த நிசப்தம் ஏற்படுத்துகிறது.

அரசியலில் எதிரொலிக்கும்

அரசியலில் எதிரொலிக்கும்

கர்நாடகாவைச் சேர்ந்த சி.டி.ரவிதான், தமிழக பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவோடுதான் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. காவிரி குண்டாறு திட்டத்தை எதிர்ப்பது கர்நாடக பாஜக அரசு. எனவே.. கூட்டிக் கழித்து பார்த்தால், இப்படி பதில் பேசாமல் இருப்பது அதிமுகவுக்குதான் களத்தில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். வலுவான ஒரு மெசேஜ் தமிழக அரசிடமிருந்து, எடியூரப்பாவுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் விவசாயிகள் எதிர்பார்ப்பு.

தமிழகத்திற்கு சொந்தம்

தமிழகத்திற்கு சொந்தம்

காவிரியிலிருந்து வரும் தண்ணீர் பிலிகுண்டுலு என்ற இடத்தை தாண்டியதுமே அது தமிழகத்திற்குத்தான் சொந்தம். அந்த தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும், எங்கே பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை கர்நாடக அரசுக்கு கிடையாது. காவிரி வழக்கின்போது பெங்களூர் குடிநீர் தேவைக்கும் காவிரியிலிருந்து தண்ணீர் பெறுவதால் அதை கருத்தில் கொண்டு கர்நாடகாவிற்கு அதிக பங்கை ஒதுக்க வேண்டும் என்று வாதிட்ட மாநிலத்திற்கு, காவிரி குண்டாறு திட்டத்தை எதிர்க்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

வறண்ட பூமியின் வளர்ச்சிக்காக

வறண்ட பூமியின் வளர்ச்சிக்காக

இத்தனைக்கும், காவிரியில் உபரியாக கடலில் சென்று கலக்கும் நீரைத்தான் பயன்படுத்த திட்டம் வகுத்துள்ளது தமிழக அரசு. கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாகக் குண்டாற்றுடன் இணைப்பதுததான் திட்டத்தின் நோக்கம். முதல்கட்டத் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது எத்தனை பேர் வயிற்றில் பால் வார்க்கும். ஆனால் கடலில் சென்று கலக்கும் தண்ணீர் கூட நான்கு பேருக்கு பயன்பட்டுவிடக் கூடாது என கர்நாடக அரசியல் தலைவர்கள் நினைப்பது பசிக்கும் குழந்தையின் கைகளில் இருந்து பாலை பிடுங்குவதற்கு சமம்.

மூக்கை நுழைக்கும் கர்நாடகா

மூக்கை நுழைக்கும் கர்நாடகா

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தால் 0.1% கூட கர்நாடகத்துக்கு பாதிப்பில்லை. ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் முழு மூச்சாக, ஒரே குரல்ல எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். தமிழக விஷயத்தில் மூக்கை நுழைக்கும் இவர்கள் நோக்கம்தான் என்ன? காவிரி இவர்கள் வீட்டு குடும்ப சொத்து என்ன எண்ணமா? நதிகள், உற்பத்தியாகும் இடத்தைவிட கடைசியாக பாயும் இடத்திற்குத்தான் அதிக உரிமை இருக்கிறது என்பது சர்வதேச சட்டம். இந்த அடிப்படை தெளிவு கூட இல்லாதவர்களா கர்நாடக அரசியல் தலைவர்கள்?

தமிழக தலைவர்கள் எங்கே?

தமிழக தலைவர்கள் எங்கே?

கர்நாடக தலைவர்களை கூட விட்டுவிடுங்கள். அரசியலுக்காக கொஞ்சமும் யோசிக்காமல் காவிரியை கையில் எடுத்துவிடுவது அவர்கள் வாடிக்கை. ஆனால் இது தமிழகத்தின் தேர்தல் காலம். இப்போது கூட ஒற்றுமையாக ஒரே குரலில் தமிழகத்திலிருந்து காவிரி குண்டாறு திட்டத்திற்கு ஆதரவாக குரல்கள் எழவில்லை என்ற கொடுமையை என்னவென்று சொல்வது? தேர்தல் காலத்திலேயே இப்படி வேடிக்கை பார்த்தால், தேர்தல் முடிந்த பிறகு இந்த திட்டத்தை பற்றி நமது தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்களா? 100 ஆண்டு கால தமிழக மக்களின் கனவு கனவாக கலைந்துதான் போகுமா? காவிரி குண்டாறு திட்டம் செயல்படுத்த முடியாதா? இப்படி ஆயிரம் கேள்விகள் விவசாயிகளின் மனதை துளைத்து கொண்டு இருக்கின்றன.

பாடம் எடுக்கும் பக்கத்து மாநிலம்

பாடம் எடுக்கும் பக்கத்து மாநிலம்

3 நாட்கள் சாப்பிடாதவர் முன்பாக அறுசுவை உணவை காண்பித்துவிட்டு, அதை எடுத்து ஒளித்து வைத்துவிட்டால் என்ன மாதிரி மனநிலை ஏற்படும்? அப்படித்தான் காவிரி குண்டாறு திட்டத்தால் வறண்ட நிலங்கள் வளம் பெறும் என எதிர்பார்த்து இருந்த விவசாயிகள் வாழ்வு ஆகியுள்ளது. நமது தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பக்கத்து மாநிலத்துக்காரர்கள் பாடம் எடுக்கும்போதும், நம்மவர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறார்களே என்ற ஆற்றாமை விவசாயிகளை குடைந்து கொண்டு இருக்கிறது.

காவிரி தண்ணீர்

காவிரி தண்ணீர்

இனியும் தாமதிக்க கூடாது.. எங்களுக்கு உரிமைப்பட்ட காவிரி தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். உங்கள் அரசியலை உங்கள் மாநிலத்தோடு வைத்துக் கொள்ளுங்கள். தமிழக உரிமையில் தலையிட யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்க வேண்டும். அதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இது அவசியமான தேவை மட்டும் இல்லை.. மிக மிக அவசர தேவையும் கூட.. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா??

English summary
Karnataka political leaders are opposing Cauvery gundar project, but Tamilnadu leaders maintain silence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X