கொருக்குப்பேட்டை கொடுமை.. 19 வயது இளைஞரை 40 முறை வெட்டிய ரவுடிகள்.. கண்டுகொள்ளாமல் கடந்த பொதுமக்கள்
சென்னை : சென்னை கொருக்குப்பேட்டையில் போதை மாத்திரை வாங்கித் தருவதில் ஏற்பட்ட பிரச்னையில் 19 வயது இளைஞரை ரவுடிகள் கொடூரமாக வெட்டிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை நடந்தபோது அப்பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஒன்றுமே நடக்காதது போல் சாதரணமாக கடந்து சென்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது.
கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரத்தை சேர்ந்தவர் ராகுல் அதே பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.
கடந்த 15ம் தேதி இவரை சந்தித்த 3 பேர், தங்களுக்கு போதை மாத்திரை வேண்டும் என 24 ஆயிரம் ரூபாய் பணத்தை ராகுலிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதை மாத்திரை வாங்கி தராமல் அலைக்கழித்துள்ளார்.

போதை மாத்திரை தகராறு
இதனால், அந்த 3 பேரும், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், பணத்தையும் திருப்பி தராமல் ராகுல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிநாராயணபுரத்துக்கு வந்து ராகுலை சந்தித்த அந்த 3 பேரும், போதை மாத்திரை அல்லது பணத்தை திருப்பி கொடு என கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக் கொலை
அப்போது, ஆத்திரமடைந்த 3 பேரும், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து, ராகுலை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அவரது தலை, முதுகு, கை உள்பட பல இடங்களில் பலத்த வெட்டு காயங்களுடன் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ராகுலை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராகுல் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

3 பேர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், ராகுலை கொலை செய்ததாக கூறி, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த சங்கர் (எ) கவுரிசங்கர் , தண்டையார்பேட்டை, கைலாசம் தெருவை சேர்ந்த சரவணன் , வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரியை சேர்ந்த ரகுமான் ஆகிய 3 பேரும் நேற்று ஆர்கேநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில் கொருக்குப்பேட்டையில் போதை மாத்திரை வாங்கித் தருவதில் ஏற்பட்ட பிரச்னையில் 19 வயது சிறுவனை ரவுடிகள் கொடூரமாக வெட்டிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கொலை நடந்தபோது அப்பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஒன்றுமே நடக்காதது போல் சாதாரணமாக கடந்து சென்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது.