பிபின் ராவத் விபத்து விசாரணை அதிகாரி முத்துமாணிக்கம் யார்?- முன்னர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி
முப்படைத்தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தினை விசாரிக்கும் தமிழக விசாரணை அதிகாரி முத்துமாணிக்கம் நேர்மையான அதிகாரி, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக பதவி வகித்தவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு.. முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

முப்படை தளபதி பிபின் ராவத் விபத்தில் உயிரிழப்பு
இந்தியாவையே உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் கிளம்பி வருகின்றன. விபத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் கேப்டன் வருண்சிங் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

விபத்து குறித்த முப்படை விசாரணை, தமிழக காவல்துறை விசாரணை
விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் உள்ள நிலையில் முறையான விசாரணை மூலம் விபத்து வழக்கு குறித்த முறையாக தகவல்களை சேகரித்து வழக்கை முடிக்க முடியும். விபத்து குறித்து அறிய முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சந்தேக மரணம் பிரிவு சிஆர்பிசி 174-ன் கீழ் வழக்குபதிவு செய்து, விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை விசாரணை ஏன்?
இந்தியாவின் எந்த மூலையில் விபத்து நடந்தாலும் யார் விசாரணை நடத்தினாலும் விசாரணை அமைப்பாக அங்கிகரிக்கப்படுவது அந்த எல்லையில் உள்ள காவல்துறை விசாரணையே. அவர்கள் தான் சட்டப்படி விசாரிக்கும் தகுதி உடையவர்கள். முப்படை விசாரணை ராணுவத்துக்குள் நடக்கும் ஆனால் நீதிமன்றத்தில் வழக்கை முடிக்கும் தகுதி சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு உள்ளது.

விசாரணை அதிகாரியாக முத்து மாணிக்கம்
இந்திய குற்றவியல் சட்டம் சிஆர்பிசி 174 -ன் கீழ் விசாரணை அதிகாரியாக சம்பந்தப்பட்ட லோக்கல் இன்ஸ்பெக்டர் செயல்படுவார். தற்போது இது இந்திய அளவிலான பிரச்சினை என்பதால் கூடுதலாக ஏடிஎஸ்பி அந்தஸ்து அதிகாரி முத்துமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேர்மையான அதிகாரி, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

யார் இந்த ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம்
விசாரணை அதிகாரி முத்து மாணிக்கம் 1997 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் கேட்டகிரி -2 ஆயுதப்படை ஆர்.எஸ்.ஐ ஆக பணியில் இணைந்தவர். பின்னர் 1996-2001 திமுக ஆட்சியில் சென்னை காவல் ஆணையராக பதவி வகித்த காளிமுத்துவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அதன் பின் சென்னை காவல் ஆணையர் முத்துக்கருப்பனின் சிறப்பு பிரிவில் எஸ்.ஐ ஆக பணியாற்றினார்.

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி
அதன் பின்னர் போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணியாற்றினார். சில காலம் எஸ்பிசிஐடி பிரிவிலும் பணியாற்றினார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற முத்துமாணிக்கம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் இவரது சிறப்பான பணி காரணமாக 2015 ஆம் ஆண்டு கேட்டகிரி -2 லிருந்து கேட்டகிரி -1 அதிகாரியாக சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு நிலை உயர்த்தப்பட்டார்.

சட்டம் ஒழுங்கு பிரிவு- வில்லிவாக்கம் உதவி கமிஷனர்
கேட்டகிரி-1 பிரிவில் டிஎஸ்பியாக பதவி உயர்வும் பெற்றார். அதன்பின்னர் 2016- ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றபோது அவரது பாதுகாப்பு அதிகாரியாக தொடர்ந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் வில்லிவாக்கம் உதவி கமிஷனராக பதவி வகித்தார். சட்டம் ஒழுங்கு நேரடி அதிகாரியாக வில்லிவாக்கம் உதவி கமிஷனராக பணியாற்றியபோது நேர்மையான அதிகாரியாக கண்டிப்புடன் நடந்துக்கொண்டார். குற்றவாளிகளுக்கு துணைபோகும் போலீஸாரையும் அவர் கண்டிக்க தயங்கியதில்லை.

நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர்
அதன் பின்னர் சட்டம் ஒழுங்கு பதவியிலிருந்து மாற்றப்பட்ட அவர் சென்னை காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பதவி வகித்த காலத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அங்கு சில ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் ஊட்டி சட்டம் ஒழுங்கு ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்து பணியாற்றி வருகிறார். விபத்து நடந்தப்பகுதி அவரது எல்லைக்குள் வருவதால் அவரை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது.

அனுபவம் மிக்க அதிகாரி
நீண்ட அனுபவம் உள்ள முத்து மாணிக்கம் பணியில் நேர்மையாளர், எதற்கும் வளைந்து கொடுக்காதவர் நிரம்ப அனுபவம் உள்ளவர் என்கிற நிலையில் அவர் தலைமையில் நடக்கும் விசாரணை சிறப்பான ஒன்றாக இருக்கும் என்கின்றனர் காவல்துறையினர். விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்ற அவர் நேற்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். 20-க்கும் மேற்பட்ட நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.