• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

'கண்காணிப்பு சாம்ராஜ்ஜியம்'.. டிஜிட்டல் விதிகள் கருத்துரிமையைப் பறிக்கும் அடாவடி செயல்.. திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: மக்களின் தனிப்பட்ட தரவுகளை விற்று அதன் மூலம் அரசுக்குப் பணம் ஈட்டப் போகிறோம் என்று அறிவித்த ஆட்சிதான் பாஜக ஆட்சி என்றும் புதிய டிஜிட்டல் விதிகள் என்பவை கருத்துரிமையைப் பறிக்கும் அடாவடி செயல் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களுக்கான புதிய விதிமுறைகள் மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிட்டது. இந்த விதிகளுக்கு உட்பட்ட செயல்பாடுகளை மாறிக்கொள்ள சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்பதாக அறிவித்துள்ளன. அதேநேரம் இந்தப் புதிய விதிமுறைகள் இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் கருத்துரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக ஒரு சாரர் விமர்சித்து வருகின்றனர்.

திருமாவளவன் அறிக்கை

திருமாவளவன் அறிக்கை

பாஜக ஆட்சியை விமர்சிப்பவர்களின் குரல்களை ஒடுக்கவே புதிய தொழில்நுட்ப விதிகளை பாஜக வரையறுத்தாக விசிக தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தரவுகளை அளிக்குமாறு அரசு கோரினால் அவற்றை நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டுமென்றும்; அரசு சுட்டிக்காட்டும் பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டுமென்றும்; இவற்றைச் செய்யப் பொறுப்புள்ள அலுவலர்களை நியமிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.

அடாவடி செயல்

அடாவடி செயல்

இதற்கு ஒப்புக் கொள்ளாத சமூக ஊடக நிறுவனங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. இது தனிமனித கருத்துரிமையைப் பறிக்கும் அடாவடி செயலாகும். அத்துடன், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் நேர் எதிரானது. இந்நிலையில், இந்த விதிகள் பொதுமக்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கின்றது என்றும், இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் ‘வாட்ஸ்அப்' நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளது.

விமர்சிப்பவர்களை ஒடுக்க

விமர்சிப்பவர்களை ஒடுக்க

சமூக ஊடகங்கள் மூலமாக வன்முறையைத் தூண்டுவது, ஆபாச செய்திகளைப் பரப்புவது, வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீய செயல்களைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று மோடி அரசு கூறியிருப்பது வரவேற்கக் கூடியதே. எனினும், தமது ஆட்சியை விமர்சிப்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காகத் தான் இந்த விதிகளை வரையறுத்துள்ளனர் என்பதே உண்மையாகும். இதனை மோடி அரசின் கடந்த கால நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

தரவுகளை விற்று பணம்

தரவுகளை விற்று பணம்

குறிப்பாக, அண்மையில் ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக பாஜக அரசு எடுத்து வரும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் இதனை நமக்கு உறுதிப்படுத்துகின்றன. குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளை விலைக்கு விற்று அதன் மூலம் அரசுக்குப் பணம் ஈட்டப் போகிறோம் என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்த ஆட்சிதான் பாஜக ஆட்சி. குடிமக்களின் அந்தரங்கம் குறித்த உரிமை மீது கொஞ்சமும் மதிப்பே இல்லாத இந்த அரசு, சமூக ஊடகங்கள் குடிமக்களின் தனி மனித உரிமைகளை மீறுகின்றன என்று நீலிக்கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் பாஜக அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அதன் ஊதுகுழல்களாக மாறிவிட்ட சூழலில், சமூக ஊடகங்கள்தான் பெரும்பாலும் குடிமக்கள் தமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்பளித்து வருகின்றன. சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான போலி கணக்குகளை உருவாக்கியும், அவற்றின் மூலமாகப் பொய் செய்திகளைப் பரப்பியும், வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வருகின்ற சங்கப் பரிவார அமைப்பினர்மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததோடு அவர்களை ஆதரித்தும் வருகிற பாஜக அரசு, வன்முறை பிரச்சாரத்தையும், வெறுப்புப் பிரச்சாரத்தையும் தடுப்பதுதான் எங்கள் நோக்கம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

கண்காணிப்பு சாம்ராஜ்ஜியம்

கண்காணிப்பு சாம்ராஜ்ஜியம்

சமூக ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்தமான ஒரு "கண்காணிப்பு சாம்ராச்சியத்தை" உருவாக்குவதே அவர்களின் நோக்கம். குடிமக்களைக் கண்காணிப்பதே சர்வாதிகாரிகளின் நடைமுறை. அதைத்தான் பாஜக அரசும் செய்ய முயல்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள்மீது நம்பிக்கை கொண்ட, ஜனநாயகத்தை நேசிக்கிற எவரும் இதை ஆதரிக்க முடியாது.

விசிக வலியுறுத்தல்

விசிக வலியுறுத்தல்

எனவே, பாஜக அரசின் இந்த சட்டவிரோத - வெகுமக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வருமாறு ஜனநாயக சக்திகள் யாவருக்கும் அறைகூவல் விடுக்கிறோம். அத்துடன், பாஜக அரசு உடனடியாக சமூக ஊடகங்கள் தொடர்பாக வரையறுத்துள்ள விதிமுறைகளைக் கைவிட வேண்டுமெனவும் தமது சர்வாதிகாரப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
VCK chief Thol thirumavalavan on center's Digital Rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X