என்னை விடுதலை செய்யுங்கள்! ஆளுநருக்கு கடிதம் எழுதிய சாந்தன்! என்ன முடிவெடுப்பார் ஆர் என் ரவி!
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தன்னையும் சிறையிலிருந்து விடுதலை செய்யக்கோரி சாந்தன் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் சில முக்கிய குற்றவாளிகள் உயிரிழந்த நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தியை துப்பாக்கியால் தாக்கும் உலகை உலுக்கிய படத்தை கிளிக் செய்த போட்டோகிராபர் மரணம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு
அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பின்னர் அது குறைக்கப்பட்டு, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே தங்களை விடுதலை செய்யக்கோரி 7 பேரும் சட்டப்போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அவர்களை விடுதலை செய்யக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றி நிலையில் இது குறித்து ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவர் முடிவெடுக்காமல் இருந்ததால் நீண்ட நாட்கள் அவர்கள் சிறைவாசத்தில் இருந்தனர்.

பேரறிவாளன் விடுதலை
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டத்தின் மூலம் பேரறிவாளனை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது இதையடுத்து அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரை சந்தித்து தனது விடுதலைக்காக குரல் கொடுத்ததற்காக நன்றி கூறினார்.

நளினி மனு
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலையை அடுத்து சிறையில் வசிக்கும் மேலும் 6 பேரை விடுவிக்க தற்போது சட்ட போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தன்னை விடுதலை செய்யக்கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சாந்தன் கடிதம்
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிறைத்துறை மூலம் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள சாந்தன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வேலூர் மத்திய சிறையில் உள்ளதாகவும், சமீபத்தில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட நிலையில் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என அந்த கடித்தத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.