அச்சுறுத்தும் கொரோனா.. சென்னையில் இறுகும் பிடி! தடுப்புசி கட்டாயமாம் - யார் யாருக்கு கட்டாயம்?
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கு தடுப்புசி கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவில், பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது.
கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஜூன் மாதம் முதல் தினசரி கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியது.
5வது நாளாக மிரள வைக்கும் கொரோனா.. சென்னை பேருந்துகளிலும் இனி கட்டாயம் மாஸ்க்- மாநகராட்சி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா
தமிழ்நாட்டில் 200-க்கும் குறைவாக இருந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 23 ஆம் தேதி 1,000 ஐ தண்டியது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,662 ஆக அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,88,091 ஆக அதிகரித்து இருக்கிறது.

சென்னையில் பாதிப்பு
சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,060 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 வாரங்களில் முதல் முறையாக ஒரு பெண் கடந்த 3 ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி இன்று காலை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

மாநகராட்சி உத்தரவு
அதில், "பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து , சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்

அபராதம்
மேலும் வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் ஆய்வின் போது முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்." என்று கூறப்பட்டிருந்தது.