சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த பக்கம் ரயில் பாதை வேண்டாம்.. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு.. நியாயமே இல்லை.. கொதித்த ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை பாதையில் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடப்போவதாக மத்திய அரசு மீண்டும் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என்றும் அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிடக்கூடாது என்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்..

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து தென்கோடி கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரையை ஒட்டிய வகையில் தொடர்வண்டிப் பாதை அமைக்க வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் கனவு ஆகும்.

அந்தக் கனவை நனவாக்கும் வகையில் தான் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலு தொடர்வண்டித்துறை இணை அமைச்சராக பதவி வகித்த போது சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை 178 கிலோமீட்டர் தொலைவுக்கு தொடர்வண்டிப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அத்திட்டத்திற்காக ரூ.523 கோடி நிதி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் முதல் காரைக்குடி வரை இப்போதுள்ள பாதையை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காரைக்குடியிலிருந்து இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு 463 கிமீ புதிய பாதை அமைக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

புதிய பாதை

புதிய பாதை

கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை விரைவாக அமைக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சென்னை முதல் கடலூர் வரையிலான பாதை அமைக்கப்படும் என்றும், காரைக்குடி-கன்னியாகுமரி புதிய பாதையில் லாபம் ஈட்ட இயலாது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாகவும் தொடர்வண்டித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு

மத்திய அரசு

கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அத்திட்டத்திற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் நடத்தி, திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப அடிப்படையில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. திட்டமிடப்பட்டவாறு பணிகள் தொடங்கப்பட்டிருந்தால், கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை எப்போதோ அமைத்து முடிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கும். ஆனால், அதை செய்வதற்கு பதிலாக, காரைக்குடி - கன்னியாகுமரி இடையே பாதை அமைப்பதற்காக செய்யப்படும் முதலீட்டிற்கு ஏற்ற வகையில் வருமானம் கிடைக்காது என்பதையே மீண்டும் மீண்டும் கோரி இத்திட்டத்தைக் கைவிடுவதில் தான் அரசு உறுதியாக உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே இந்தத் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் வலியுறுத்தலை ஏற்று திட்டத்தை செயல்படுத்த ஒப்புக் கொண்டது. இப்போது மீண்டும் அதே காரணத்தைக் கூறி இத்திட்டத்தை கைவிடுவது நியாயமல்ல.

நெரிசல் குறையும்

நெரிசல் குறையும்

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதையில் முதலீடு செய்யும் அளவுக்கு வருவாய் கிடைக்காது என்ற தொடர்வண்டித் துறையின் மதிப்பீடு தவறானதாகும். சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் கடுமையான நெரிசல் நிலவி வருகிறது. இப்பாதையில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதையை அமைப்பதன் மூலம் தான் சென்னை & கன்னியாகுமரி இடையே நெரிசலை குறைக்க முடியும்.

கைவிடக்கூடாது

கைவிடக்கூடாது

கிழக்குக் கடற்கரையோரத் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வழியாக சென்னைக்கு சுற்று வட்டப் பாதையில் தொடர்வண்டிகளை இயக்க முடியும். அதுமட்டுமின்றி, இந்தப் பாதையில் சுற்றுலாத் தலங்களும், ஆன்மிகத் தலங்களும் இருப்பதால் பயணிகள் ஆதரவுக்கு ஒருபோதும் குறைவு இருக்காது. இவற்றுக்கெல்லாம் மேலாக தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கிழக்குக் கடற்கரையில் அதிக எண்ணிக்கையில் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல தொடர்வண்டிகள் தேவை. இப்பாதையில் சரக்குத் தொடர்வண்டிகளை இயக்குவதன் மூலமாக மட்டுமே மிகக் குறுகிய காலத்தில் முதலீட்டை திரும்பப் பெற முடியும். எந்த வகையில் பார்த்தாலும் இந்தப் பாதை அவசியத் தேவையாகவும், லாபம் தரும் ஒன்றாகவும் இருக்கும் நிலையில் அதைக் கைவிடுவது நியாயமல்ல.

காரைக்குடி கன்னியாகுமரி

காரைக்குடி கன்னியாகுமரி

எனவே, காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடும் முடிவை தொடர்வண்டித்துறை திரும்பப் பெற வேண்டும்; சென்னை முதல் கடலூர் வரை புதிய பாதை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 1200 கோடியாக அதிகரித்து விட்ட நிலையில், அதற்கான நிதியை ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும். காரைக்குடி - கன்னியாகுமரி பாதை அமைப்பதற்கான செலவில் 50 விழுக்காட்டை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு, கிழக்குக் கடற்கரை பாதை செயலாக்கம் பெறுவதையும், பணிகள் விரைவுபடுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
PMK leader Ramadoss demand to central that chennai - Kanyakumari East Coast Railway line should not be abandoned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X