கோடை வெயிலை தணிக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா
சென்னை: அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வழக்கமாக மே மாதம் கடும் வெயில் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான நாட்களில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
ஆத்தாடி.. திருமணம் பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்.. இந்தோனேசியாவில் வினோத நடைமுறை.. பரபர காரணம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழையும் முன் கூட்டியே தொடங்கும் நிலையில், வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் கம்மியாகவே இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

மழை
தமிழ்நாடு புதுவையில் அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெப்பச்சலனம் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை
வரும் மே 24 முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இலட்சதீவு, கர்நாடகா - கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச மழை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இந்த கத்தரி வெயில் வரும் மே 28ஆம் தேதி வரை இருக்கும். இருந்த போதிலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகக் கோவை சின்கோனா பகுதியில் 11 செமீ மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கோவை சின்னக்கல்லார் பகுதியில் 10 செமீ மழையும், வால்பாறையில் 8 செமீ மழையும் பதிவாகி உள்ளது.