சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
சென்னை: நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. 18 வயது நிரம்பி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தலில் ஓட்டளிக்கலாம்.

லோக்சபா தேர்தலையொட்டி பொதுமக்கள் ஓட்டுப்போட வசதியாக நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று பல நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
இந்நிலையில் தான் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாளை மெட்ரோ ரயில் என்பது சனிக்கிழமைக்கான நேர அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை தினம் என்பதாலும், லோக்சபா தேர்தல் நாள் என்பதாலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும் 7 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதேபோல் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 6 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னையில் இருந்து நேற்று முதல் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு ஓட்டளிக்க புறப்பட்டுள்ளனர். மக்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல நேற்றும், இன்றும் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 092 பேருந்துகளுடன், 2 ஆயிரத்து 970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 184 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாவட்டங்களுக்கு புறப்பட்டு உள்ளனர். இதனால் சென்னையில் தாம்பரம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications