பரந்தூர் ஏர்போர்ட் நில கையகப்படுத்தும் பணிகள்! எவ்வளவு நிலம் தேவை? இழப்பீடு என்ன.. விரிவான தகவல்
சென்னை: தலைநகர் சென்னையில் அமைய உள்ள இரண்டாவது விமான நிலையத்தின் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
நாட்டின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம். உலகின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இங்கிருந்து விமானம் இயக்கப்படுகிறது.
நேரம் தவறாமை உள்ளிட்ட குறியீடுகளிலும் கூட சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பானதாகவே இருந்து வந்துள்ளது.
'சென்னை பரந்தூரில் புதிதாக விமான நிலையம்' என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்ப திறப்பீங்க? புது தகவல்கள்!

மீனம்பாக்கம்
பெரும்பாலும் முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள், நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் தான் அமைந்து இருக்கும். ஆனால், சென்னையில் மீனம்பாக்கத்திலேயே அமைந்து உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் விமான போக்குவரத்தைச் சமாளிக்கச் சென்னை ஏர்போர்ட் திணறுகிறது. அதேநேரம் நகருக்குள் அமைந்து இருப்பதால், விரிவாக்கம் செய்வதிலும் சிக்கல்கள் உள்ளது.

இரண்டாவது விமான நிலையம்
இதனால் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இது நீண்ட ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைய போதிய இடவசதி கொண்ட பன்னூர், பரந்தூர் ஆகிய இரு இடங்களைத் தமிழக அரசு முன்மொழிந்து இருந்தது அதில் பரந்தூரில் நகரின் 2ஆவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

பரந்தூர்
தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் இரு இடங்களில் சர்வதேச விமானம் அமைய உள்ளது இது தான் முதல்முறை. பரந்தூரில் அமைய உள்ள இந்த விமான நிலையம் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இப்போது உள்ள மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இருந்து சுமார் 59 கிலோமீட்டர் தூரத்தில் அமையப் போகிறது. இது தொடர்பாகச் சமீபத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

தொழில் வளர்ச்சி
இந்த 2ஆவது விமான நிலையம் ஆண்டுக்கு 10 கோடி பயணிகள் வரை கையாளும் திறனைக் கொண்டதாக இருக்கும். மேலும் பராமரிப்பு பகுதிகள், துணை நிலையங்கள், உணவகங்கள், சரக்கு கையாளும் பகுதிகளும் அருகிலேயே அமைய உள்ளது. இந்த விமான நிலையத்தின் மூலம் முதல் 8 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலம்
விமான நிலையத்திற்குத் தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த உடன் மிக விரைவாகக் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான நிலையத்திற்குக் குறைந்தது 2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் 50 சதவீத இடம் அரசு நிலம் தான். மீதியுள்ள 50% நிலத்தை மட்டுமே கையகப்படுத்த வேண்டும்.

கையகப்படுத்தும் பணிகள்
அவை தனியார் மற்றும் தனி நபர்களின் கட்டுப்பாட்டில் இப்போது உள்ளது. மேலும், இதற்காக நாகப்பட்டு ஏரி, ஏகனாபுரம் வயலேரி, ஏகனாபுரம் காலேரி, நெல்வாய் ஏரி, மகாதேவிமங்கலம் ஏரி உள்ளிட்ட 5 ஏரிகளும் கையகப்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சில நூறு ஏக்கர் விவசாய நிலம், 2,500 குடியிருப்புகள் கையகப்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சர் விளக்கம்
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. இது தொடர்பாகத் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சகம் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், " தொழில் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் தேவை. ஆனால் நிலம் கையெடுப்பு உள்ளிட்ட பல சவால்களை வரும், நிலத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் பாதித்துவிடாமல் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய இழப்பீடுகளை வழங்கிய பின்னரே நிலம் கையகப்படுத்தப்படும்" என்றார்.