யூடியூப் சேனல்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை
சென்னை: ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில், வரும் நாட்களில் யூடியூப் சேனலில் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக பேடடி எடுத்து வெளியிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சேனலின் உரிமையாளர் தினேஷ், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆசின் பாஷா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்னென்ன பிரிவு
இவர்கள் 3 பேர் மீதும் சென்னை சாஸ்திரி நகர் போலீசார் ஐபிசி 294 (பி) ஆபாசமாக பேசுதல், 354 (பி), பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்தல், ஐபிசி 509 பெண்களை பொது இடங்களில் அவமானம்படுத்தும் வகையில் கேள்விகளை கேட்பது, 506(2) மிரட்டுதல் மற்றும் பெண்களை வன்கொடுமை தடுப்பு சட்டம் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்காணித்தல்
இந்நிலையில் சென்னை டாக்ஸ் போன்று அறுவறுக்கத்தக்க ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பும் மற்ற யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் யூடியூப் சேனல்களை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மக்களிடையே பரவலாக கோரிக்கை எழுந்தள்ளது,

யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை
இந்தநிலையில் தான் யூடியூப் சேனல்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில், வரும் நாட்களில் யூடியூப் சேனலில் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செட்டப் பெண்
அத்துடன் யூடியூப் சேனல்களையும் அவற்றின் வீடியோக்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணிக்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே சென்னை டாக் சேனலில் செட்டப் செய்து பேசவைக்கப்பட்ட பெண்ணையும் விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.