சென்னைவாசிகளே இன்னும் 2 நாளைக்கு இடியும் மின்னலுமாய் மழையிருக்கு... வானிலை ஜில் அறிவிப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளுவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது.
சென்னையில்... இன்று மழை வெயிட்டா இருக்கும்.. 14ம் தேதி லைட்டாகி.. 15ம் தேதி பிரித்தெடுக்குமாம்!

மழை நீடிக்கும்
சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் நகரிலும் புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்தம்
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வட தமிழக கடற்பகுதி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக வட தமிழக கடலோரம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

எங்கெங்கு கனமழை
நாளை 12ஆம் தேதியும் 13ஆம் தேதியும் இரு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் மழை
சென்னையில் காலை முதலே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அண்ணாபல்கலை பகுதியில் 3 செமீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்திலும் எண்ணூரிலும் 2 செமீ மழை பெய்துள்ளது. ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவரூரிலும் மழை பதிவாகியுள்ளது.