• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மேட்ச்னா இது மேட்ச்.. செம சேஸிங்.. பஞ்சாப், ராஜஸ்தான் ரெண்டுமே தாறுமாறு! கத்துக்கனும் தோனி & சிஎஸ்கே

|

சென்னை: ஐபிஎல் மேட்ச் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. என்று, ஷோவை நடத்தி காட்டியுள்ளனர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்.

விடாக்கண்டன்.. கொடாக்கண்டன் என்று சொல்வார்களே, அது போல இரு அணிகளும், பாம்பும், கீரியும் போல மாறி மாறி சீறியதை பார்த்த ரசிகர்கள், வீட்டில், தாங்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர்.

போகிற போக்கில், சேசிங் என்றால் எப்படி இருக்கவேண்டும்..? கேப்டன் ஆட்டம் என்றால் என்ன..? என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாடம் எடுத்துச் சென்றுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இதுதான் போட்டி

இதுதான் போட்டி

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்தது. மாயங் அகர்வால் இந்த போட்டியிலும் கலக்கிவிட்டார். ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். வெறும், இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி. கேப்டன் கேஎல் ராகுல் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 183 ரன்கள் குவித்த நிலையில் தான் முதல் விக்கெட் சென்றது. எனவே வெறும் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இவ்வளவு ரன்களை குவிக்க முடிந்தது பஞ்சாப் அணியால்.

ஓப்பனிங்னா இதுதான்

ஓப்பனிங்னா இதுதான்

துவக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிஎஸ்கே அணியின் முரளிவிஜய்-வாட்சன் ஜோடிக்கு பளிச் என்று அடித்துச் சொன்னது போல இருந்தது இந்த பார்ட்னர்ஷிப். இவ்வளவு ரன்களுடன் ஸ்கோர் போர்டை பார்த்ததும் பலரும் டிவியை ஆப் செய்து விட்டு எப்படியும் பஞ்சாப் ஜெயிக்கும் என்று நினைத்து, படுத்து விட்டனர். கடந்த சில போட்டிகளாக சிஎஸ்கே விளையாடிய சேஸிங்கை பார்த்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கக் கூடும். ஆனால் சேசிங் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடம் அதற்குப் பிறகுதான் ஆரம்பமானது. விழித்திருந்தவர்கள், மட்டும் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லலாம்.

களம் வந்த கேப்டன்

களம் வந்த கேப்டன்

சிஎஸ்கே கேப்டன் தோனி மாதிரி.. ஒவ்வொரு வீரரையாக களத்தில் இறக்கிவிட்டு கடைசியில் ஆட வேண்டும் என்று நினைக்கவில்லை ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித். கடந்த சில போட்டிகளாகவே, துவக்க வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார் அவர். அவர் இந்த சீரிசுக்கு முன்பு எப்போதுமே ஓப்பனிங் இறங்கியவர் கிடையாது என்பது இதில் கவனிக்க வேண்டிய அம்சம். நேற்றைய போட்டியிலும் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

ரன் அடிப்பது முக்கியமில்லை வெற்றிக்காக அவர் காட்டிய வேட்கை ஒவ்வொரு பந்திலும் தெளிவாகத் தெரிந்தது.

ஆவேச கேப்டன் ஸ்மித்

ஆவேச கேப்டன் ஸ்மித்

லெக் சைடில் திருப்பி விட முயன்ற ஒரு பந்து, பேட்டில் படாமல் கீப்பரிடம் சென்றபோது ஸ்மித் ஆவேசத்தில் கத்திய சத்தம் ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி டிவியில் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களின் செவிப்பறையை கிழித்தது. அந்த அளவுக்கு ஆவேச சத்தம் அது. ஒரு பந்தை கூட வீணாக்கக்கூடாது என்ற உத்வேகம் ஸ்மித்திடமிருந்தது. ஆனால், நாம் ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக விளையாடிய போது, தோனி எவ்வாறு பேட் செய்தார் என்பதையும் இதையும், ஒப்பிட்டு பார்க்கவேண்டி இருக்கிறது.

தூங்கும் தோனி

தூங்கும் தோனி

ஒவ்வொரு பந்தாக சிங்கிள் தட்டிய போது கூட முகத்தில் எந்த டென்ஷனும் அவரிடம் இல்லை. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு அணியின் கேப்டன் உத்வேகத்தை களத்தில் காட்டாவிட்டால்.. அந்த அணியின் மற்ற வீரர்கள் என்ன செய்வார்கள்? தூங்கி வழிவார்கள்! சென்னை அணியும் அப்படித்தான் தூங்கி வழிகிறது. குளுக்கோஸ் குடிச்சிட்டு வாங்க என சேவாக் நக்கல் செய்யும் அளவுக்கான ஆழ்ந்த நித்திரை அது.

ஆனால் ஸ்மித் தனது பேட்டிங் ஆர்டரை மேலே கொண்டுவந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்ததோடு, ஒரு பாலையும் மிஸ் செய்யக்கூடாது என்ற உத்வேகத்தையும் காட்டி அடுத்தது, இறங்கிய மற்ற வீரர்களுக்கும் அந்த ஆவேசத்தை கடத்திச் சென்றார்.

திறமைசாலிகள்

திறமைசாலிகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 4 ரன்களில் அவுட் ஆன போதிலும், அதையெல்லாம் பற்றி கவலைப்படவில்லை ராஜஸ்தான் அணி. தங்களது திறமையை நம்பி ஒவ்வொரு வீரர்களும் அடித்து ஆடினார்கள். 42 பந்துகளில் சஞ்சு சாம்சன் 85 ரன்களை குவித்தார். 7 சிக்ஸர்கள் இதில் அடக்கம். ஒவ்வொரு ஷாட்டும், சச்சின் சுட்டிக் காட்டியதை போல, சரியான ஷாட்டுகள். பேட்டின் விளிம்பில் பட்டு போனவை இல்லை. மூன்று பந்துகள் மிச்சம் இருக்கும்போதே ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 226 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்று கிளம்பியது.

ரன் ரேட்டை குறைத்த ராஜஸ்தான்

ரன் ரேட்டை குறைத்த ராஜஸ்தான்

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் என்னவென்றால்.. ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய போதிலும் ஸ்மித், சாம்சன், ராகுல் திவேதியா ஆகியோர் களத்தில் நின்றபோது தேவைப்படும் ரன் ரேட் குறைந்து கொண்டே சென்றதே தவிர கூடவில்லை. சென்னை அணிக்கு ஓவருக்கு 11 ரன்கள் தேவை என்று இருக்கும் தோனி இறங்க மாட்டார். அப்புறம் ஒரு ஓவருக்கு 14 ரன்கள் தேவை என்று நிலைமை மோசமாகும். அப்போதும் களம் இறங்க மாட்டார். ஒருவருக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலை வரும்போதுதான் தோனி இறங்குவார். இப்படி ரன்ரேட் சென்னைக்கு கூடிக் கொண்டே செல்லுமே தவிர, ஆரம்பம் முதலே ராஜஸ்தான் அதை குறைத்துக் கொண்டு வந்தது. மிகச் சிறப்பான ஒரு சேசிங் நடக்கப் போகிறது என்பதற்கான சமிக்ஞையை ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு அது கொடுத்துவிட்டது.

தென் ஆப்பிரிக்கா சேஸிங்

தென் ஆப்பிரிக்கா சேஸிங்

ஒரு மிகப்பெரிய டோட்டலை சேஸ் செய்யும்போது இப்படித்தான் ரன் ரேட்டை வைத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகப் புகழ் பெற்ற ஒன்டே போட்டி சேஸிங்கை தென்னாப்பிரிக்கா இப்படித்தான் செய்தது. 434 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. அதை விரட்டிச் சென்றபோது ஹர்சல் கிப்ஸ் 175 ரன்களை விளாசினார். அந்த போட்டியை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சேசிங்.

ப்பா.. பறந்து செய்த பீல்டிங்

ப்பா.. பறந்து செய்த பீல்டிங்

வெறும் பேட்டிங் மட்டும் கிடையாது. வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம்.. ஃபீல்டிங் விஷயத்திலும் சென்னை அணி ஏராளமாக கற்க வேண்டியிருக்கிறது. இந்த இரு அணிகளிடமும் அது இருந்தது. அதுவும் பூரான் பவுண்டரி லைனில் உள்ளே பறந்து சென்று பந்தை பிடித்து, உள்ளே பந்தை வீசி விட்டு கீழே விழுந்த காட்சி இருக்கிறதே.. அப்பப்பா.. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு பீல்டிங்கை பார்த்திருக்க முடியாது. நாம் தான் மலைபோல ரன்களை குவித்து விட்டோமே என்று மெத்தனமாக இருக்க வில்லை பஞ்சாப். எந்த அளவுக்கு அவர்கள் களத்தில் உத்வேகம் காட்டினார்கள் என்பதற்கு அந்த ஃபீல்டிங் காட்சி, ஒரு சாட்சி.

சென்னை அணிக்கு போட்டு காமிங்க

சென்னை அணிக்கு போட்டு காமிங்க

ஆனால் சென்னை அணி எப்படி பீல்டிங் செய்தது? எத்தனை எளிமையான கேட்சுகளை விட்டது? வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் போட்டிகளில் கூட சொதப்பியது.. என்பதை நாம் பார்த்தோம். பேட்டிங், உத்வேகம், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பிஎச்டி படிக்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அவருக்குப் போட்டுக் காட்ட வேண்டிய மேட்ச் இதுதான். அதற்கு முன்பாக சென்னை அணி இருக்கும் ஹோட்டல் அறையில், ரிப்ளை மோடில் இந்த வீடியோக்களை போட்டு விட்டாலும் பரவாயில்லை. சாப்பிடும் போதும்.. தூங்கும் போதும் இது பார்த்துக்கொண்டாவது நம்மவர்களுக்கு பழைய உத்வேகம் வருகிறதா என்று பார்க்கலாம்!

 
 
 
English summary
Kings XI Punjab and Rajasthan royals, super chasing by Rajasthan royals, Rajasthan royals detail in Tamil,
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X