ஜப்தி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட பிரைம் சரவணா ஸ்டோர்ஸ்! குவிக்கப்பட்ட போலீஸ்.. தி.நகரில் பரபரப்பு
சென்னை: புகழ் பெற்ற ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான சரவணா ஸ்டோர்ஸ் சென்னை முழுதும் பல கிளைகளைக் கொண்டிருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் என்ற அடிப்படை அடையாளத்தோடு, அதே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், பிரைம், நியூ என்ற அடைமொழியோடு தமிழகமெங்கும் கிளைகளைப் பரப்பி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் இயங்கி வரும் பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம், இந்தியன் வங்கியில் சுமார் 120 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது. பல வருடங்களாக இந்தக் கடனை நிறுவனம் செலுத்த தவறி இருப்பதாக வங்கி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
கடன் மற்றும் அதற்கான வட்டித் தொகையைக் கட்டச் சொல்லி பலமுறை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஆனாலும் அந்த நிறுவனம் நோட்டீஸுக்கு எந்த பதிலும் கூறாமல், பணத்தையும் திரும்ப செலுத்தாமல் இருந்திருக்கிறது.
குரோம்பேட்டை எம்ஐடி, சரவணா ஸ்டோர்ஸை அடுத்து போத்தீஸிலும் பரவிய கொரோனா.. 13 ஊழியர்களுக்கு பாசிட்டிவ்!

இந்தியன் வங்கி
இதனால், இந்தியன் வங்கி 2019ம் ஆண்டு நீதிமன்றத்தை நாடியது. அங்கு வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே, பணத்தை கட்ட உத்தரவுவந்திருக்கிறது. இது எதையும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் செய்யவில்லை. இதனால் ஜப்தி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது வங்கி.

நீதிமன்றம்
சரவணா ஸ்டோர்ஸ் கடையை ஜப்தி செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை வங்கி பெற்றது. இதை கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாகவே வங்கி தரப்பில் இருந்து சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று கடையை ஜப்தி செய்திருக்கிறது வங்கி.

ஜப்தி
தி.நகரில் இருக்கும் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் உஸ்மான் சாலையில் இருக்கும் ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடையை இன்று காலை ஜப்தி செய்யப்பட்டது. நீதிமன்ற அலுவலர்கள் முன்னிலையில், போலீஸ் துணையுடன் இரு கடைகளும் ஜப்தி செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ஐ.டி ரெய்டு நடந்த நிலையி, ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் ஜப்தி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீஸ் குவிப்பு
ஜப்தி நடவடிக்கையையொட்டி அங்கு பெருமளவிற்கு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஜப்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், சரவணா ஸ்டோரில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இது பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்ற அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன.