டி.ராஜேந்தரை மருத்துவமனைக்கே சென்று பார்த்த முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ந்த முன்னாள் திமுககாரர் டி.ஆர்
சென்னை : உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் டி.ராஜேந்தரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.
டி.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திமுகவில் சில காலம் பணியாற்றியவர். பின்னர் அங்கிருந்து வெளியேறி லட்சிய திமுக எனும் கட்சியை தொடங்கினார்.
டி ராஜேந்தர் வயிற்றில் ரத்தக் கசிவு.. சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக சிம்பு அறிக்கை

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் தமிழ்த் திரையுலகில் பல வெற்றிகரமான திரைப்படங்களை கொடுத்தவர். தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமான அவர், இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகப் பரிமாணங்களைப் கொண்டவர். அவரது அடுக்குமொழி வசனங்களும், பேச்சுகளும் ரசிகர்களிடையே அவரை தனித்துவப்படுத்தினே என்றே கூறலாம்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு வயிற்று பகுதியில் ரத்தக் குழாய் வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல
டி.ராஜேந்தரின் மகன் நடிகர் சிம்பு, தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம் என்றும், அவரது உடல் நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் வெளிநாடு அழைத்து செல்வதாகவும் டி.ராஜேந்தர் முழு சுயநினைவுடன் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
இந்நிலையில், உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் டி.ராஜேந்தரை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், மருத்துவர்களிடம் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

திமுகவில்
எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி ஆட்சியில் இருந்த நேரத்தில், டி.ராஜேந்தர், அவரை எதிர்த்து திமுகவில் இணைந்தார். எம்ஜிஆருக்கு எதிராக கடும் பிரச்சாரம் செய்து திமுக தொண்டர்களிடம் தனி செல்வாக்குப் பெற்றவர் டி.ராஜேந்தர். 1989ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் திமுகவை விட்டு வெளியேறினார்.

லட்சிய திமுக
பின்னர் 2004ல் லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கினார். ஆனாலும், கருணாநிதி மீது அபிமானம் கொண்டவராகவே இருந்தார். நான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் கருணாநிதி தான் என்றும் பலமுறை கூறியுள்ளார் டி.ராஜேந்தர். இந்நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் டி.ராஜேந்தரை சந்தித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.