சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் அண்ணன் அழகிரி, என் மகன் உதயநிதி படித்த கல்லூரி.. தன் ஏக்கத்தை வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

சென்னை: என் அண்ணன் அழகிரியும். என் மகன் உதயநிதியும் படித்த இந்தக் கல்லூரியில் நான் படிக்காமல் போய்விட்டேனே என்ற ஏக்கம் இப்போது எனக்கு வந்திருக்கிறது. ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கல்லூரி இருக்கும் என்று சொன்னால், அது லயோலா கல்லூரியாகத்தான் இருக்க முடியும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் உள்ள லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை திறந்து வைத்தார். லிபா எனப் பெயரிடப்பட்ட இந்தக் கட்டடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கட்டப்படுள்ளது.

3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

இந்தக் கட்டட திறப்பு விழாவின்போது கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, எழிலன் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., சேவியர் பிரிட்டோ (கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் தலைவர்), அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதிய கட்டடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: "உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஏக்கம் உண்டு

ஏக்கம் உண்டு

இங்கு உரையாற்றிய சிலர் குறிப்பாக, நம்முடைய தம்பி தயாநிதி மாறன் பேசும்போது சொன்னார், அதேபோல முன்னாள் மாணவராக இருக்கக்கூடிய வில்சன் அவர்களைப் பற்றி நினைவுபடுத்தினார். இப்படி இந்தக் கல்லூரிக்கும் அவர்களுக்கும் இருந்த தொடர்பு எப்படியெல்லாம் இருந்திருக்கிறது, இந்தக் கல்லூரியில்தான் நாங்கள் படித்தோம் என்ற அந்தப் பெருமையை எடுத்துச் சொன்னார்கள். நான் வெளிப்படையாக ஒன்றை சொல்ல விரும்புவது, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இந்தக் லயோலா கல்லூரிக்கும் ஒரு பெரிய தொடர்பே உண்டு என்பதை நான் இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், கலைஞருடைய குடும்பத்தில் இருந்து என்னுடைய அண்ணன் அழகிரி இந்தக் கல்லூரியில்தான் படித்தார். அதைப்போல, முரசொலி மாறனின் மூத்த மகன் கலாநிதி மாறன் இந்தக் கல்லூரியில்தான் படித்தார். இங்கு வந்திருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறன் இந்தக் கல்லூரியில்தான் படித்தார். ஏன், என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் கூட இந்தக் கல்லூரியில்தான் படித்திருக்கிறார். இந்தக் கல்லூரியில் நான் படிக்காமல் போய்விட்டேனே என்ற ஏக்கம் இப்போது எனக்கு வந்திருக்கிறது. ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கல்லூரி இருக்கும் என்று சொன்னால், அது லயோலா கல்லூரியாகத்தான் இருக்கமுடியும். அதைத்தான் தயாநிதி மாறன் சொன்னார், வாக்கு எண்ணிக்கை இங்கு நடக்கும், ரிசல்ட் எப்போது வரும் என்று வாசலில் காத்துக்கொண்டிருப்போம் என்று சொன்னார்.

முதலமைச்சர்

முதலமைச்சர்

ஒவ்வொரு முறையும் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்த லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணப்பட்டு, அங்கிருந்துதான் அறிவிப்பு வந்தது. இப்போது நான் முதலமைச்சராக இருக்கிறேனென்றால், உங்களுடைய கல்லூரியில்தான் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன்மூலமாக அந்த செய்தி வெளியில் வந்து அதற்குப் பிறகுதான் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறேன். அதனால்தான் சொன்னேன், என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் எத்தனையோ இருந்தாலும், இந்தக் கல்லூரியை நிச்சயமாக மறக்கமுடியாது என்பதை பெருமையோடு மீண்டும் உங்களிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பாராட்டு

பாராட்டு

பழம்பெருமையும் கம்பீரமும் மிக்க இந்த இலயோலா கல்லூரி வளாகத்திற்கு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பதில் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமையாகக் கருதுகிறேன். புதிய கட்டடத்தை திறந்து வைக்கவேண்டும் என்று வரவேற்புரையாற்றிய ஜோ அருண் குறிப்பிட்டதுபோல என்னை அழைத்தார்கள். என்னைப் பொறுத்தவரை நான் சொல்ல விரும்புவது, இலயோலா கல்லூரி என்பது எப்போதுமே, கட்டடம் திறந்துவைத்தாலும், திறந்து வைக்காவிட்டாலும், ஒரு புதிய கட்டடமாகத்தான் இந்தக் கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பழம்பெருமை குறையாமல் இந்தக் கல்லூரியை நீங்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு, முதலில் அத்தனை பேருக்கும் நான் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

லயோலா குடும்பம்

லயோலா குடும்பம்

இந்த லயோலா கல்வி நிறுவனத்திற்கு 95 ஆண்டுகால பாரம்பரியம் இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் நூற்றாண்டு விழாவைக் காணப்போகிறீர்கள். அந்த நூற்றாண்டு விழாவிலும் நான் பங்கேற்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தக் கல்வி நிறுவனத்தில் படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் உலகமெங்கும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அறிவுத்துறையில், தொழிற்துறையில் சிறந்தவர்களாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். லயோலாவின் குடும்பம் என்பது, பல லட்சக்கணக்கான மாணவர்களைக் கொண்ட குடும்பம் இந்தக் கல்லூரி. இத்தகைய கல்விக் குடும்பம் மேலும் தழைக்க வேண்டும் என்ற என்னுடைய வாழ்த்துகளை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தொழில்கள்

தொழில்கள்

லயோலாவில் இயங்கக்கூடிய இந்த லிபா நிறுவனம் கடந்த 42 ஆண்டுகாலமாக பல தொழில் நிறுவனத் தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும், உலகத்தின் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகளைக் அளவிட முடியாது. அந்தளவுக்கு அரும்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித்துச் சென்றவர்கள் தங்களை உயர்த்திக் கொள்பவர்களாக மட்டுமல்ல, தங்களைச் சுற்றி உள்ளவர்களையும் வளர்த்தெடுப்பவர்களாகச் செயல்பட்டு வருவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். தன் பெண்டு - தன் பிள்ளை - சோறு - வீடு - சம்பாத்தியம் - ஆகிய இவையுண்டு - தானுண்டு என்று வாழக்கூடாது என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஒருவரது கல்வி, அவருக்கு மட்டுமல்லாமல், அவரது குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நாட்டுக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கல்வியாக இருந்திட முடியும். கல்வியுடன் சேர்ந்து சமூக அக்கறையையும் ஊட்டும் கல்வியாக அதனைப் புகட்ட வேண்டும். அப்படி புகட்டும் நிறுவனமாக இலயோலா போன்ற நிறுவனங்கள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தான் வளர்கின்றபோது சமூகம் வளர வேண்டும். சமூகத்தை உயர்த்துவதே தான் உயர்வதற்கு வழிவகுக்கும் என்று உணர வேண்டும். இந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு லிபா நிறுவனம் இயங்கிவந்திருப்பது நெஞ்சுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஏழை எளிய, சிறுபான்மையின மக்களுக்கும், பட்டியலினக் குடும்பங்களில் இருந்து வரக்கூடிய பயில்கிற மாணவர்களுக்கும் நிதியுதவி அளித்து, மீது சிறப்புக் கவனம் செலுத்தி இந்த லிபா நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே சிந்தனையோட்டத்தில் செயல்படும் லிபா நிறுவனம் இப்போது ஒரு புதிய கட்டடத்தைக் கட்டி எழுப்பியிருப்பது, இதனை வெறும் கட்டடமாக நான் பார்க்கவில்லை. ஏழை எளிய, சிறுபான்மையின, பட்டியலின மக்களின் கலங்கரை விளக்காக நான் பார்க்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு இந்த ஒளி கிடைத்தாக வேண்டும். இந்த நிறுவனத்தை நடத்திவரக்கூடிய இயக்குநர் அருட்தந்தை ஜோ அருண் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாட்டில் பல மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இயக்குநராகப் பணிபுரிந்து அந்த அனுபவத்தையும் அவர் பெற்றிருக்கிறார். லிபா நிறுவனத்தை உலகளவில் சிறந்த நிறுவனமாக உயர்த்திட வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டடத்தை உருவாக்கியுள்ளார். அவரது கனவு நனவாக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

காணொலி காட்சி

காணொலி காட்சி

கொரோனா காலக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்ற காரணத்தினால், இணைய வழியாக இந்த கட்டடத்தைத் திறந்திட நான் நினைத்தேன், அதைத்தான் ஜோ அருண் அவர்களும் குறிப்பிட்டுச் சொன்னார். உண்மையிலேயே அவர் தேதி வேண்டும் என்று கேட்க வந்தபோது, இந்த விழாவிற்கு வரவேண்டும் என்று என்னிடத்தில் கேட்டபோது, கொரோனா காலமாக இருக்கிறது, அதை காணொலி காட்சி மூலமாகக்கூட நடத்தலாமே என்று ஒரு கருத்தைச் சொன்னேன். ஆனால் பிடிவாதமாக, உரிமையோடு "நான் வந்துதான் திறந்திட வேண்டும்; அப்படித் திறக்கவில்லையென்றால் எனக்கு திறப்பதற்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது நீங்கள் திறக்கலாம்" என்றுகூட அருட்தந்தை ஜோ அருண் சொன்னார்கள், விடாப்பிடியாக இருந்தார். இறுதியாக அவர்தான் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த வெற்றியினுடைய வெளிப்பாடுதான் இன்றைக்கு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதிக கல்லூரி கட்டினோம்

அதிக கல்லூரி கட்டினோம்

கலைஞர் 2010-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த நேரத்தில், இந்தக் கட்டடத்திற்கு முன்பு அமைந்திருக்கக்கூடிய தொழில்நுட்பக் கல்லூரியை அவர் திறந்து வைத்தார். சரியாக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வளாகத்திற்கு நான் வந்து, இந்தக் கட்டடத்தை திறந்து வைத்திருப்பது உள்ளபடியே நான் நெகிழ்ச்சியிலே ஆழ்ந்துபோயிருக்கிறேன். அதற்காக அத்தனை பேருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கலைஞர் திறந்து வைத்தது ஒரு தொழில்நுட்பக் கல்லூரி. இன்று நான் உங்கள் மத்தியில் திறந்து வைத்திருப்பது ஒரு மேலாண்மைக் கல்லூரி. திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்ததே கல்லூரிகளில்தான். அதனால்தான், கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகமான கல்லூரிகளை உருவாக்கியிருக்கிறோம், இப்போதும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

கல்லூரிகள்

கல்லூரிகள்

பெருந்தலைவர் காமராசர் அவர்களது காலத்தில் பள்ளிகள் அதிகம் உருவாக்கப்பட்டது. கலைஞர் காலத்தில் கல்லூரிகள் அதிகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி அதிகமாக பல்கிப் பெருக வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு இந்த இலக்கை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட்டோம். அனைவருக்கும் ஏதாவது ஒரு பட்டம் என்ற இலக்கையும் விரைவில் அடைந்துவிடுவோம். அனைவரும் உயர்கல்வி கற்றவர்களாக வளர வேண்டும்; வாழவேண்டும். அந்த இலக்கை எட்டிய முதல் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர வேண்டும். அதற்கு இலயோலா போன்ற நிறுவனங்களும் தங்களது அறிவுப் பணியைத் தொடர வேண்டும்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

புதிய புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். அதனை நோக்கி மாணவர்களை ஈர்க்க வேண்டும். அத்தகைய பட்டம் பெற்றவர்கள், உலகம் முழுவதும் உள்ள தொழில்களை, வேலைவாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும். தமிழர்கள் தங்களது அறிவால் - திறமையால் - கல்வியால் - வேலைவாய்ப்பால் உலகளாவிய பெருமையை அடைய வேண்டும். அதற்கு இலயோலா போன்ற கல்வி நிறுவனங்கள் உறுதுணையாக நிற்க வேண்டும். தொழில்முனைவோர்களை உருவாக்குகிற இதுபோன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்கள் நமது நாட்டில் பெருகிட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில், ஒரு கல்வி நிறுவனம், வெறுமனே வேலையாட்களை உருவாக்குவதைவிட; சமூகத்தையும், தொழில்சார்ந்த நிறுவனங்களையும் முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்துகிற தலைவர்களையும் உருவாக்கிட நீங்கள் உதவிடவேண்டும்.
இங்கு உங்கள் ஆட்சி, எங்கள் ஆட்சி என்று ஒரு பட்டிமன்றமே நடந்திருக்கிறது. அதனால்தான் நான் தொடக்கத்திலேயே சொன்னேன், இது நமது ஆட்சி. சட்டமன்றத் தேர்தல் முடிவுற்று வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது இந்த இலயோலா கல்லூரிக்கு நான் வந்து, அதற்கான சான்றிதழ் வாங்கிக்கொண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்குத்தான் சென்றேன். அங்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தருகின்றபோது "வெற்றியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்று நிருபர்கள் கேட்டார்கள். மகிழ்ச்சி அடைகிறேன், வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும், வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு ஒட்டு போடாமல் நாம் தவறிவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அந்த அளவிற்கு நம்முடைய பணி இருக்கும் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

ஸ்டாலின் பெருமிதம்

ஸ்டாலின் பெருமிதம்

நம் ஆட்சி அமைந்து, நூறு நாட்களில் பலநூறு திட்டங்களை அறிவித்து, அவற்றைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இருண்ட நிலையில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் ஒரு ஒளிமயமான பாதையில் வீறுநடை போட வைத்திருக்கிறோம். சமூகநீதிகொண்ட பொருளாதார வளர்ச்சியை உருவாக்க நினைக்கிறோம். அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்கிற அரசாக நம்முடைய அரசு நிச்சயம் அமையும். இதன் காரணமாக தமிழ்நாட்டை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றறிக் காட்டுவோம். அந்த மாற்றத்திற்கு, முன்னேற்றத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவிடவேண்டும். பத்து மாநிலங்களைக் குறிப்பிட்டு, அதில் முதலிடத்தில் முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்று பெருமையாகச் சொன்னார்கள், இது எனக்கு பெருமை இல்லை. நம்முடைய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்ற பெருமைதான் எனக்கு உள்ளபடியே பெருமிதம் தரும். அதற்கு நீங்கள் எப்போது எங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டு, இந்தப் பணியை சிறப்போடு நிறைவேற்றிக் காட்டியிருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய வாழ்த்துகளும், நன்றிகளும்!" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கல்லூரியில் உரையாற்றினார்.

English summary
tamilnadu Chief Minister MK Stalin friday speech in loyola college, "my brother alagiri studied here , my son also studied in layola collage but i did not studied in this collage. now I longing that why i did not studied layola collage in my life".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X