இவ்வளவு பங்களித்தும் எங்களுக்கு வெறும் 1.21% தானா..?- புள்ளிவிவரம் சொல்லி பொங்கித் தீர்த்த ஸ்டாலின்!
சென்னை : பிரதமர் மோடி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் விழாவில் 31,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்துப் பேசினார். அப்போது, பிரதமர் மோடியிடம் முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தார் ஸ்டாலின்.
கச்சத் தீவு மீட்பு, தமிழுக்கு இந்திக்கு இணையான அங்கீகாரம் தேவை! மோடியிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்
மேலும், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி, வருவாய் பங்களிப்பில் தமிழ்நாட்டின் இடம் பற்றிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், வரி வருவாய் பங்கீடு மிகக் குறைவாகவே தமிழகத்திற்கு அளிக்கப்படுவது பற்றி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

தமிழ்நாடு முன்னணி மாநிலம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு பல்வேறு வகையிலும் நாட்டின் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை என பல்வேறு வகையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு பங்களிப்பு அளித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைத்தையும் உள்ளடக்கியதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சி எனத் தெரிவித்தார்.

தமிழகத்தின் பங்களிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு. ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.4 விழுக்காடாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஜவுளித்துறை ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 19.4 விழுக்காடு. கார்கள் ஏற்றுமதியில் 32.5 விழுக்காடு தமிழகத்தின் பங்காக உள்ளது. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு.

இதுதான் கூட்டாட்சியா?
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் மத்திய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டிற்கு பகிர்ந்து அளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே. தமிழ்நாடு போன்று நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு அளிக்கும் மாநிலங்களுக்குத் தனது பங்களிப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். அதுதான் உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.

சமமாக ஏற்க வேண்டும்
மேலும், மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தக்கூடிய திட்டங்களில், தொடக்கத்தில் குறிப்பிடப்படும் ஒன்றிய அரசின் நிதி திட்டம் முடியும் வரை தொடர வேண்டும். பயனாளிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில், பயனாளிகள் தமது பங்களிப்பை செலுத்தமுடியாத தருணத்தில் மத்திய- மாநில அரசுகள் இணைந்து அதனை சமமாக ஏற்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.