ஒரே நாளில் 20 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள்! சான்ஸே இல்லைங்க! முதல்வருக்கு குவியும் பாராட்டு!
சென்னை: தமிழகத்தில் புதிதாக 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
அந்த 20 புதிய அரசுக் கல்லூரிகளிலும் இந்தாண்டே மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது உயர்கல்வித்துறை.
எந்தெந்த ஊரில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை இங்கே தொகுத்துள்ளோம். அதில் உங்கள் மாவட்டமோ ஊரோ இருக்கிறதா எனப் பாருங்கள்.
“மாநிலங்களை ஆண்ட இசைஞானி” - இளையராஜாவுக்கு மிட் நைட்டில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்

உயர்கல்வித் துறை
2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

எந்தெந்த ஊர்களில்
விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் - தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் - ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் - மானூர், திருப்பூர் மாவட்டம் - தாராபுரம், தருமபுரி மாவட்டம் - ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம் - கூத்தாநல்லூர், வேலூர் மாவட்டம் - சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

20 அரசுக் கல்லூரிகள்
இதேபோல் திருச்சி மாவட்டம் - மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் - தளி, புதுக்கோட்டை மாவட்டம் - திருமயம், ஈரோடு மாவட்டம் - அந்தியூர், கரூர் மாவட்டம் - அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் - திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் - ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் - வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

காணொலி மூலம்
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 20 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பது என்பது எளிதில் கடந்துப் போக கூடிய விஷயமல்ல. இதன் மூலம் உயர்கல்வி கற்கும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை இனி வரும் நாட்களில் கணிசமாக உயரக்கூடும். காலேஜில் சீட் கிடைக்கவில்லை என்ற பேச்சே எழாத வகையில் உயர்கல்வித்துறை பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.