அடிவயிறு கலங்கியது, அம்மாவுக்கு நெஞ்சுவலி! கலங்கிய திருமாவளவன்! பட்டென போனை போட்ட முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : எண்பதை நெருங்கும் வயது. திடீரென அம்மாவுக்கு நெஞ்சுவலி. ஓரிரு நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்த நிலையில், திருமாவளவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் தாயாரான பெரியம்மாள் தன்னுடைய சொந்த ஊரான அரியலூரில் உள்ள தன்னுடைய வீட்டிலே வசித்து வருகிறார்.
இந்நிலையில் பெரியம்மாளுக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவராகவே மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அவருக்கு இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் ஒன்றை அகற்றினர்.
உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்.. திருமாவளவனை உலுக்கி எடுத்த தாயின் உருக்கமான வேண்டுகோள்

விசிக திருமாவளவன்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த திருமாவளவன் "ஊர்ல என்ன அநாதையா போட்டுட்டு நீ ஊர சுத்திக்கிட்டுருக்கிற; திடீர்னு எனக்கு நெஞ்ச அடச்சுகிட்டு ஆவி பிரியுற மாதிரி வலி வந்துச்சு; நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்குப் போனேன். உசுரு போவும்போது நீ கூட இருந்தா போதும்" அம்மா இப்படி சொன்னபோது அடிவயிறு கலங்கியது.

அம்மாவுக்கு நெஞ்சுவலி
எண்பதை நெருங்கும் வயது. திடீரென அம்மாவுக்கு நெஞ்சுவலி. ஓரிரு நாட்கள் கழித்துதான் எனக்குத் தெரிய வந்தது. அம்மாவை அவசரமாக திருச்சிக்கு அழைத்துச் சென்றபோதுதான் தகவலறிந்து சென்னைக்கு அழைத்து வர செய்தேன். சூன் 22 மாலை நடந்த ஆஞ்சியோ சோதனையில்தான் அவருக்கிருந்த ஆபத்து தெரியவந்தது.

ட்விட்டரில் உருக்கம்
இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்து ஓரிடத்தில் மட்டும் அடைப்பு நீக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டம் அமைவதற்கு ஏதுவாக 'ஸ்டென்ட்' எனும் ஒன்றைப் பொருத்தியுள்ளனர்.
இது அறுவை சிகிச்சை அல்ல. ஆனாலும் இது ஒரு சவாலான மருத்துவப் பணி. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது." என பதிவிட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து பதிவிட்டுள்ள திருமாவளவன்," இன்று காலை எட்டு மணியளவில் தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி." என பதிவிட்டுள்ளார்.