“ஒத்துப்போகல.. மாத்தி விடுங்க”- புகார் வாசித்த அமைச்சர்கள்.. மொத்தமா தூக்கி அடிக்க ஸ்டாலின் திட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று முக்கிய துறைகளின் இயக்குநர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறதாம்.
ஸ்டாலின் குடும்பத்திலிருந்து இன்னொரு அரசியல்வாதி? திமுகவில் இப்போ இதுதான் டிரெண்டிங் டாபிக்!

ஆட்சிக்கு வந்ததுமே
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்ததுமே தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளை அதிரடியாக மாற்றினார். கருணாநிதிக்கும், தனக்கும் நெருக்கமாக இருந்ததால் ஜெயலலிதா ஆட்சியில் தள்ளிவைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வெ.இறையன்புவை தலைமை செயலர் ஆக்கி தனது அருகிலேயே வைத்துக்கொண்டார்.
தொடர்ந்து உதயசந்திரனை தனது முதன்மை செயலராக நியமித்தார். முதல்வரின் தனிச் செயலாளர்களாக உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய முக்கியமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவினரே முதல்வருக்கு நிர்வாக ரீதியாக முக்கிய ஆலோசனைகளைக் கூறி வருகின்றனர்.

பலமுறை மாற்றம்
அதேபோல, சைலேந்திர பாபுவை காவல்துறை டிஜிபியாக நியமித்தார் முதல்வர் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க காவல்துறை சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து இந்த ஓராண்டில் பல முறை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். திமுக அரசுக்கு ஆதரவான பல அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளாது.

பெரிய மாற்றம்
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் நிர்வாக ரீதியாக பெரிய மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அமைச்சர்கள் சிலருக்கும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறை செயலாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. மூத்த அமைச்சர்கள் பலர், தங்கள் துறை செயலாளர்களை மாற்றும்படி, முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பணிகள் பாதிப்பு
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும், ஓராண்டு ஆட்சியை கொண்டாடும் சூழலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தூக்கி அடிக்க முடியாது என்றும் அது விமர்சனங்களை ஏற்படுத்தும் என்றும் கூறி அமைச்சர்களை முதல்வர் சமாதானப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர்கள் - அதிகாரிகள் மோதல் போக்கு காரணமாக அந்தத் துறைகளின் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வருக்கு தகவல் சென்றுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்
தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்பாகவே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரை மாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நகராட்சி நிர்வாகம், கூட்டுறவுத் துறை, வீட்டு வசதித் துறை உள்ளிட்ட துறைகளின் இயக்குநர்கள் உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கான பட்டியலை தலைமை செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் தயார் செய்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.