ஓடி ஓடி உழைக்கனும்! வேளாங்கண்ணி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்! புரோகிராம் ஷெட்யூல் இதோ!
சென்னை: டெல்டா மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாக செல்லும் முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு வேளாங்கண்ணியில் தங்குகிறார்.
கிறிஸ்துவர்களின் புனித தலமாக கருதப்படும் வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற ஆரோக்யமாதா தேவாலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை நண்பகல் திருச்சி சென்றடையும் முதல்வர் ஸ்டாலின், அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு செல்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் இதில் உறுதியா இருக்காரு.. “எதிர்கட்சியா இருக்கும்போதே அப்படி” - மா.சு சொன்ன தகவல்!

ஸ்டாலின் பயணம்
தமிழகத்தில் தனது காலடி சுவடு பதியாத இடமே இருக்கக் கூடாது என்கிற முனைப்புடன் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கோட்டையில் இருந்தவாறே காணொலி மூலம் எல்லா பணிகளையும் மேற்கொள்ள முடியும், ஆய்வு நடத்த முடியும், திட்டங்களை தொடங்கி வைக்க முடியும் என்கிற நிலையிலும் ஊர் ஊராக பயணம் செய்து மக்களை சந்திப்பதில் அலாதி பிரியம் கொண்டவர் முதல்வர் ஸ்டாலின்.

டெல்டா மாவட்டங்கள்
அதனால் தான் தொடர்ந்து சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு வருகிறார். கோவை, ஊட்டி, சேலம் என வரிசையாக கடந்த வாரம் கொங்கு மண்டல மாவட்டங்களுக்கு டிரிப் அடித்த அவர், இந்த வாரம் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நாளை நண்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடையும் அவர், அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை 4 மணி வரை ஓய்வெடுக்கிறார்.

தூர் வாரும் பணிகள்
பின்னர் மாலை 4 மணிக்கு திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக காரில் பயணிக்கும் அவர் இரவு 7 மணியளவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சென்றடைகிறார். அங்கு நாளை இரவு தங்கும் முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்கிழமை அதாவது 31-ம் தேதி காலை தூர் வாரும் பணிகளை வரிசையாக ஆய்வு செய்யவுள்ளார். கல்லாறு, தரங்கம்பாடி, காட்டூர், ஆகிய இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணிகளை நேரில் பார்வையிடுகிறார்.

திருவாரூரில் மதிய உணவு
பிறகு செவ்வாய்கிழமை மதியம் திருவாரூரில் மதிய உணவு சாப்பிடும் முதல்வர் ஸ்டாலின், அங்கு மாலை 3.30 வரை ஓய்வெடுக்கிறார். பின்னர் 4 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை நோக்கி புறப்படும் முதல்வர் ஸ்டாலின், வரும் வழியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளையும் பார்வையிடுகிறார். செவ்வாய்கிழமை மாலை 6.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு சென்னை புறப்படுகிறார்.

பொதுப்பணித்துறை
முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொள்ளும் இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருககன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருப்பார்கள் எனத் தெரிகிறது. முதல்வர் ஆய்வுக்கு வருவதையொட்டி திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட நிர்வாகங்கள் அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.