கொரோனாவுக்கு இடையே.. தியேட்டர்களில் 100% ரசிகர்களுக்கு அனுமதி.. விஜய் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு
சென்னை: திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நடிகர்கள் விஜய், சிம்பு உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. இடையே கடைகள் திறப்பு, போக்குவரத்து தொடக்கம் என்றிருந்தாலும் தியேட்டர்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். கடந்த நவம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல் தியேட்டர்கள், மால்களில் உள்ள தியேட்டர்கள் என 50 சதவீதம் இருக்கைகளுடன் இயங்கலாம் என அரசு அனுமதி அளித்தது.
புதுவையில் 9 மாதங்களுக்கு பிறகு.. 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு

தியேட்டர் உரிமையாளர்கள்
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்த 50 சதவீத இருக்கைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஊதியம் கொடுக்கவும் பராமரிக்கவும் போதவில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இருக்கை
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது சினிமா துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டுக் கொண்டார்.

ஈஸ்வரன்
பொங்கலுக்கு விஜயின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்கள் வெளியாகின்றன. இன்றைய தினம் சிம்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் 100 சதவீதம் இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.

அரசாணை
இந்த நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தியேட்டர் நிர்வாகம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.