பா.ஜ.க.வுக்காக களமிறங்கும் திரையுலக பிரபலங்கள்... களைகட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திரையுலக பிரபலங்களை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளது அக்கட்சியின் கலைப்பிரிவு.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.
அதில் திரையுலக பிரபலங்கள் ஊரகப் பகுதிகளுக்கு சென்று கிராமங்கள் தோறும் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பரப்புரை செய்வது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள் படிக்கும் அறையில் கண்ணீர் புகை குண்டு.. பார்வை பறிபோனதாக ஜாமியா பல்கலைக்கழகம் புகார்

பாஜக போட்டி
வரும் 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 50 மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் 284 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு பாஜக போட்டியிடுகிறது. அந்த இடங்கள் அனைத்திலும் வெற்றிபெற்றாக வேண்டும் என்பது பாஜக தலைமையின் விருப்பம். இதன்மூலம் கட்சியின் அடித்தளம் வலுவாகக் கூடும் என்பது அவர்களின் எண்ணம்.

பிரபலங்கள்
பாஜகவில் உள்ள திரையுலக பிரபலங்களான நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர், நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி, ஜெயலட்சுமி, மதுவந்தி, இசையமைப்பாளர் தினா உள்ளிட்டோரை கிராமப்புற மக்களை சந்திக்க வைத்து அவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுப்பயணம்
பாஜக கலைப்பிரிவு நிர்வாகிகளான கே.டி.ராகவனும், வானதி சீனிவாசனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் தேர்தலுக்கு 5 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் 3 நாட்கள் பிரச்சாரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை தொடங்கி புதன்கிழமை வரை பாஜக திரையுலக பிரபலங்கள் பரப்புரையில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.

சாதனைகள்
கிராமப்புற மக்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் என்பதால் அவர்கள் மத்தியில் பேசும் போது கவனமுடன் பேச வேண்டும் என்றும், நிதானமான முறையில் பரப்புரை இருக்க வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளதாம். மேலும், மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.