சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈழத் தமிழர்களிடம் கருத்து கேட்க முயன்ற செய்தியாளர்கள் மீது வழக்கு.. ஸ்டாலின் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: "கோலமிட்ட பெண்கள் - ஈழத்தமிழர்களின் கருத்தறிய சென்ற செய்தியாளர்கள் மீது மத்திய - மாநில அரசுகள் வழக்கு போட்டு அச்சுறுத்துவதா? ஜனநாயக முறையில் போராடுவோர் மீதான அனைத்து வழக்குகளையும் உடனே திரும்பப்பெற வேண்டும்" என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்ததன் மூலமாக மத்திய அரசு எத்தகைய மக்கள் விரோத அரசு என்பது நாட்டுக்கு வெட்டவெளிச்சம் ஆனதோ, அதைவிட அச்சட்டத்தை ஆதரித்து நிறைவேற்றக் காரணமாக அமைந்ததன் மூலமாக தமிழக அதிமுக அரசு அதிகமாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு அவமானப்பட்டு நிற்கிறது.

Citizenship amendment act protest, MK Stalin request to Tamilnadu government

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய பாஜக அரசுக்கு பணிவிடை செய்து கிடக்கும் அரசு என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அது எந்த அளவுக்கு போய்விட்டது என்றால், மத்திய அரசாங்கத்தைக் கண்டித்து தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில் கோலம் கூடப் போடக்கூடாது என்று தடை போடும் அலங்கோலமான அளவுக்குப் போயிருக்கிறது. குடியுரிமைத் திருத்தம் சரியானது தான், அதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று எல்லாம் தெரிந்தவரைப் போல முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறார்.

இச்சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் பேரணி நடத்துகிறார்கள். இப்படி ஆதரிப்பவர்கள் செய்வது ஜனநாயக உரிமை என்றால், எதிர்த்துப் பேரணி நடத்துவதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், கோலம் போடுவதும், ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் தானே? இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை உரிமைகளை வழங்கி உள்ளது. எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை,கருத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவை அனைவருக்கும் சமமாக உண்டு. அந்த உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோத காரியங்களைத் தான் இன்றைய எடப்பாடி அரசு தாராளமாகச் செய்து வருகிறது.

Citizenship amendment act protest, MK Stalin request to Tamilnadu government

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிந்து ஊர்வலம் சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குப் பதிவு செய்வதைப் போல துக்ளக் தர்பார் வேறு இருக்க முடியாது. இத்தனை ஆயிரம் பேர் மீது வழக்குப் போட்டோம் என்று விசுவாசம் காட்டப் பயன்படுமே தவிர, அதனால் எந்தப் பயனும் இல்லை.சென்னை முதல் தமிழகம் முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணியாகச் சென்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதன் மூலமாக, அவர்களது ஜனநாயக உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்ல, யாரும் அரசாங்கத்தை எதிர்க்கக் கூடாது என்ற பாசிச அடக்குமுறைச் சிந்தனையுடன் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோரை மிரட்டி ஒடுக்க நினைக்கிறது எடப்பாடி அரசு.

தங்களது ஜனநாயக உரிமைகளை அமைதி வழியில் பயன்படுத்தும் வகையில் சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த மாணவ மாணவியர் கோலம் போட்டுள்ளனர். அவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள்; அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக வேன்களில் ஏற்றப்பட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். கோலம் போடுவது சமூகக் குற்றமா? தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த, அடுத்தவருக்கு எந்தத் தொல்லையும் இல்லாமல் கோலம் இட்டுள்ளனர். அவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதா? இல்லை. இந்த தகவல் கிடைத்ததும் அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். அதன்பிறகு தான் அவர்களைக் காவல்துறை விடுவித்துள்ளது.

'கோலம் போடுவது தவறு இல்லை, ஆனால் அனுமதி வாங்க வேண்டும்' என்று தமிழக அமைச்சர் ஒருவர் பேட்டி அளிக்கிறார். 'கோலம் போடலாம், ஆனால் அது அலங்கோலமாக இருக்கக் கூடாது' என்று இன்னொரு அமைச்சர் சொல்கிறார். அலங்கோல ஆட்சியில் அமைச்சராக இருப்பவர்களிடம் நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கத்தை எதிர்த்துக் கோலம் போடுவது அலங்கோலம் என்றால், ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியைப் போலச் செய்து தெருத்தெருவாக அந்த அமைச்சர் தூக்கிச் சென்று வாக்குப் பிச்சை கேட்டாரே அது அலங்கோலம் அல்லவா? அலங்கோலம் குறித்து யார் பேசுவது? இந்த நாட்டில் கோலம் போடுவதற்கு அனுமதி வாங்க வேண்டுமானால், என்ன என்ன விஷயங்களுக்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து விட்டால் நல்லது!

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அங்குள்ள ஈழத்தமிழர் அகதிகள் முகாமுக்குச் சென்ற வார இதழின் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்படக் கலைஞர் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், களியக்காவிளை காவல்நிலையங்களில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அவர்களிடம் கருத்துக் கேட்க அந்த இரு பத்திரிக்கையாளர்களும் சென்றுள்ளனர். ஈழத்தமிழர்களின் கருத்தை அறிவதற்காகத்தான் அவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் மீது வழக்கு என்றால், ஜனநாயகம் எடப்பாடி ஆட்சியில் எந்த அளவுக்கு கொலை செய்யப்படுகிறது என்பதை விளக்கத் தேவையில்லை.

ஈழத்தமிழர்களைச் சந்தித்து பத்திரிக்கையாளர்கள் கருத்துக் கேட்பது தவறு என்றால், இந்த அரசாங்கம் அந்த அகதிகள் முகாமுக்குச் சென்று கருத்துக் கேட்டதா? 'ஈழத்தமிழர்க்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருகிறேன்' என்று சொல்லும் முதலமைச்சர், அரைமணி நேரமாவது அம்மக்களின் உணர்வை அறிய, கருத்தை அறிய நேரத்தைச் செலவு செய்தாரா?

ஈழத்தமிழர்க்குக் குடியுரிமை வழங்க வாதாடி வருகிறோம் என்று புளுகுமூட்டை பழனிசாமியாக மாறிமாறிப் பொய் சொல்லி வருகிறாரே தவிர, எங்கே வாதாடினார்கள்? குடியுரிமைத் திருத்தச் சட்டம் மக்களவையில் தாக்கல் ஆனபோது அதிமுகவின் ஒரு உறுப்பினர் ஆதரித்து வாக்களித்தார். மாநிலங்களவையில் தாக்கல் ஆனபோது அதிமுகவின் 11 உறுப்பினர்களும், அதிமுக கூட்டணியில் உட்கார சீட் கிடைக்காமல் டயரில் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டு இருக்கும் பாமகவின் ஒரு உறுப்பினரும் ஆதரித்து வாக்களித்தார்கள்.

ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற வேண்டி திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா கொடுத்த திருத்தத்தை எதிர்த்து வாக்களித்து அந்தத் திருத்தத்தை தோற்கடித்த தமிழினத் துரோகிகள் தான் இவர்கள். இது மட்டுமல்ல, இந்தக் குடியுரிமைத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, டாக்டர் சத்யகோபால் சிங் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அதில் அதிமுகவின் முன்னாள் மக்களவை உறுப்பினர் டாக்டர் பி. வேணுகோபால் உறுப்பினராக இருந்தார். பத்துக்கும் மேற்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அக்குழுவில் தங்களது அதிருப்தி கருத்தினைக் கொடுத்தார்கள். அதில் எந்த எதிர்ப்புக் கருத்தையும் சொல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து கையெழுத்துப் போட்ட கட்சி அதிமுக தான். அக்குழு 4.1.2019 அன்று அளித்த அறிக்கையில், எந்த அதிருப்திக் கருத்தையும் அதிமுக உறுப்பினர் சொல்லவில்லை. இந்த லட்சணத்தில் தான், ஈழத்தமிழர்க்கு குடியுரிமை வழங்க நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம் என்று பீற்றிக் கொள்கிறார் முதல்வர். இப்படி ஈழத்தமிழர்க்கு துரோகம் இழைத்த அரசு தான், அகதி முகாமுக்குச் சென்று கருத்தறிய முயற்சித்த பத்திரிக்கையாளர்கள் இருவர் மீது வழக்கு போட்டுள்ளது. இது ஒருவிதமான பாசிசத் தன்மையுடன் ஆட்சியை நடத்த முயற்சிப்பதன் அடையாளம்.

மத்திய பாஜக அரசு, தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே தகுதியுடன் தான், நினைப்பது அத்தனையையும் நிறைவேற்றத் துடிக்கிறது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வேளாண்மை, சுகாதாரம், கல்வி ஆகியவை பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் காஷ்மீர், அயோத்தி, முத்தலாக், குடியுரிமை, தேசிய குடிமக்கள் பதிவேடு என்று மதவாதச் சித்தாந்தத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. ஒருவிதமான கலாச்சாரத் தாக்குதல் மூலமாக மக்களைத் தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்க மத்திய அரசு நினைக்கிறது.

தங்களது அரசியலுக்கு எதிர்க் கருத்துக் கொண்டவர்களை மிரட்டி, அச்சுறுத்தி, தொடர் பழிகளைப் போடுவதன் மூலமாக அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றத் துடிக்கிறார்கள். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். குழுமத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வுக்கு மத்திய அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்கள் வருவதாக இருந்தது. வைரமுத்து மீதான அரசியல் பகைமை மற்றும் தமிழ்ப்பகைமை காரணமாக மத்திய அமைச்சரை வரவிடாமல் தடுத்துள்ளார்கள். ஏற்கனவே மூன்று டாக்டர் பட்டங்களை வாங்கியவர் அவர். எத்தனையோ முறை தேசிய விருது வாங்கியவர் அவர். இந்த விழாவைத் தடுப்பதன் மூலமாக கவிப்பேரரசுவை வீழ்த்திவிட முடியாது. ஆனால் அற்ப மகிழ்ச்சி அடைந்து கொள்வார்கள்.

இது அல்ல, உண்மையான, நேர்மையான அரசியல். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், அதன் மூலமாக மக்கள் மனங்களை வெல்வதும் தான் உண்மையான வெற்றி; நிலைக்கும் வெற்றி. அதனை உணராமல் அச்சுறுத்தலின் மூலமாக மத்திய மாநில அரசுகளும் அதன் அரசியல் சக்திகளும் செயல்படுவார்களேயானால், மக்கள் மன்றத்தில் அவர்கள் வெகுசீக்கிரத்தில் அந்நியப்பட்டுப் போவார்கள் என்று எச்சரிக்கிறேன். எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடி வரும் அனைவர் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

English summary
Cases filed against protesters who oppose Citizenship amendment act should be withdrawn by Tamilnadu government, says MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X