• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி... அசிங்கத்தின் உச்சம் - ஸ்டாலின் கண்டனம்

|

சென்னை: முதல்வர் சுற்றுப் பயணத்திற்குப் பாதுகாப்புக்குச் செல்லும்போதே, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் தைரியத்தை சிறப்பு டிஜிபியே பெற்றிருப்பது அசிங்கத்தின் உச்சபட்சம், ஆணவத்தின் வெளிப்பாடு என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்து வழக்குத் தொடராமல் பாதுகாக்க நினைத்தால் திமுக மாபெரும் போராட்டத்தில் இறங்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பும் வழியில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை ஏன் முதல்வர் காப்பாற்றி வருகிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

CM continue to protect the officers DMK will launch a massive protest says MK Stalin

முன்பு ஐ.ஜி. முருகன் மீதான புகாரை மூடி மறைத்தார்; பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவினரைக் காப்பாற்றினார்! 'பெண்களுக்கு பாதுகாப்பு' என மக்கள் பணத்தில் விளம்பரம் கொடுத்தால் மட்டும் போதுமா?என்று ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸை, முதல்வர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளையும், அதிமுகவினரையும் பாதுகாக்கும் முதல்வர் பழனிசாமி, பெண்ணினத்தின் பாதுகாப்பிற்கே சவாலாக இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் நிகழ்ந்த இந்த பாலியல் தொல்லை, தமிழகக் காவல்துறைக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான கண்ணியமான ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றும் தமிழகக் காவல்துறையில் இதுபோன்ற விரல் விட்டு எண்ணும் சில புல்லுருவி போலீஸ் அதிகாரிகளால் "யூனிபார்மில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை" என்ற நிலை உருவாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் இது முதல் புகார் அல்ல. ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த ஐ.ஜி. முருகன் மீது, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுத்தார். அதையும் மூடி மறைத்தார் முதல்வர். உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகு சிபிசிஐடியில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதிலும் பாதுகாத்து, இன்றுவரை அந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது சட்ட விரோத உத்தரவுகளை நிறைவேற்றவும் இதுபோன்ற பாலியல் தொந்தரவில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளை முதல்வர் பழனிசாமி காப்பாற்றுகிறார்.

அதன் விளைவு இன்றைக்குப் பேச வேண்டும் எனத் தனது காருக்குள் அழைத்து ஒரு பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கும் தைரியத்தைக் காவல்துறையில் உள்ள சிறப்பு டிஜிபியே பெற்றிருப்பது கேவலமானது. அதுவும், முதல்வரின் பிரச்சாரப் பாதுகாப்பிற்குச் செல்லும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியே இப்படியொரு அத்துமீறலில் ஈடுபட்டுள்ள அசிங்கத்தின் உச்சபட்சம் - நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடு.

தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு முதல்வர் உருவாக்கியுள்ள இந்த இழிநிலையைத் திமுக ஒருபோதும் அனுமதிக்காது. எனவே, பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்துள்ள புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸை சஸ்பெண்ட் செய்து கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்.

பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இதுபோன்ற போலீஸ் அதிகாரியைப் பாதுகாத்து தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண் போலீஸார் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்க முயன்றால், திமுக மாபெரும் போராட்டத்தில் இறங்கும் என்று எச்சரிக்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

English summary
DMK president M.K. Stalin took on the chief minister for protecting officers like Rajesh Das. If the government and chief minister Palanisami continue to protect the officers, the DMK will launch a massive protest, Stalin said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X