• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அனைவரிடத்திலும் எளிமையாக பழகக் கூடியவர் அமைச்சர் துரைக்கண்ணு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

|

சென்னை: அனைவரிடத்திலும் மிக எளிமையாக பழகக் கூடியவர் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சனிக்கிழமை இரவு சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர் பன்வரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இன்று காலை சென்னை காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் திரு உருவப் படத்துக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணு உருவப் படத்துக்கு தமாகா தலைவர் ஜிகே வாசன் எம்.பி. மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

துரைக்கண்ணு மரணத்தால் அதிர்ச்சி

துரைக்கண்ணு மரணத்தால் அதிர்ச்சி

அப்போது செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அண்ணன் திரு. ஆர். துரைக்கண்ணு அவர்கள், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (31.10.2020) இரவு காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். வேளாண்மைத் துறை அமைச்சர் அண்ணன் திரு. ஆர். துரைக்கண்ணு அவர்கள் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1972-ம் ஆண்டு சேர்ந்து, திறம்பட பணியாற்றியவர்.

கட்சி, கொள்கைகளில் உறுதி

கட்சி, கொள்கைகளில் உறுதி

கட்சி மீது மிகுந்த பற்றும், கழக கொள்கைகளின் மீது உறுதியும் கொண்டவர். கழகம் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றவர். மாண்புமிகு புரட்சித் தலைவர் காலத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவராக பணியாற்றிவர் என்ற பெருமைக்குரியவர். "எண்ணிய எண்ணியாங்கு எய்து, எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" என்ற வள்ளுவரின் கூற்றுப்படி அண்ணன் திரு. ஆர்.துரைக்கண்ணு அவர்கள் ஒரு செயலை செய்ய எண்ணி விட்டால், அதைச் செய்து முடிக்கும் மன உறுதி உடையவராக இருந்து, அதில் வெற்றி கண்டவர்.

சிறப்பாக பணியாற்றியவர்

சிறப்பாக பணியாற்றியவர்

ஆரம்ப காலத்திலிருந்தே கட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பாடுபட்டவர். என்னிடம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் பழகியவர். அனைவரிடமும் விருப்பு, வெறுப்பின்றி அன்புடன் பழகும் பண்பாளர். மூன்று முறை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளராகவும், 15 வருடம் தொடர்ந்து பாபநாசம் ஒன்றிய கழக செயலாளராகவும் பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். தான் வகித்த பொறுப்புகளில் துடிப்புடன் பணியாற்றியவர் என்ற சிறப்புக்குரியவர் அண்ணன் திரு. ஆர். துரைகண்ணு.

தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு

தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் திரு. ஆர். துரைக்கண்ணு அவர்களை 2016-ம் ஆண்டு வேளாண்மைத் துறை அமைச்சராக நியமனம் செய்தார்கள் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எனது அமைச்சரவையிலும் வேளாண்மைத்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றி மக்கள் நன்மதிப்பை பெற்றவர். அண்ணன் திரு.ஆர். துரைக்கண்ணு அவர்களின் மறைவு அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், எனக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி, மகன்கள், மகள்கள், மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 
 
 
English summary
Tamilnadu Chief Minister Edappadi Palaniswami has condoled the demise of Agriculture Minister Duraikannu due to coronavirus.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X