குடியரசுத் தேர்தலில் திமுக வியூகம் என்ன? கூட்டத்தை கூட்டிய ஸ்டாலின்.. பரபர ஆலோசனை! ஸ்கெட்ச் யாருக்கு
சென்னை: குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதிக பலத்துடன் இருக்கும் திமுக, யாரை ஆதிரிப்பது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜுன் 15ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி ஜூன் 29ஆம் தேதி என்பதால், வேட்பாளர் தேர்வு மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற ஆளும் பாஜக தலைவர்களும், எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் காங்கிரஸ் கட்சியும் ஈடுபட்டு வருகின்றன.
மீண்டும் தென்னை நல வாரியம்! முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை! யாருக்கு தலைவர் பதவி? அலைமோதும் விஐபிக்கள்!

அதிர்ச்சி கொடுத்த மம்தா பானர்ஜி
இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பக கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக வரும் ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதேபோல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக பொதுவான ஒருத்தரை தேர்ந்தெடுக்கவே ஆலோசனை கூட்டம் என்று கூறப்பட்டது. இருந்தாலும், மம்தா பானர்ஜியின் கடிதம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.

மு.க.ஸ்டாலினிடம் நேரம் கேட்ட காங்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி தரப்பில் 2024ஆம் மக்களவை தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட ஒது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆலோசனை
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேரம் கேட்டிருந்தனர். இதனால், யாருக்கு ஆதரவளிக்கலாம் என்பது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தக் ஆலோசனை கூட்டத்தில், குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

என்ன முடிவு எடுக்க வாய்ப்பு?
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின் அதிக பலத்துடன் உள்ள கட்சியான திமுக, என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக, மம்தா பானர்ஜி கூட்டத்துக்கு செல்ல முடிவு செய்யுமா? என்று கேள்வியும் எழுந்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்விலும் திமுகவின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.