கச்சத்தீவு திருவிழா: தமிழக மீனவர்களுக்கு அனுமதி கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயப் பெருவிழாவில் தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வோராண்டும் பிப்ரவரி/மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

இலங்கை அரசு அனுமதி மறுப்பு
பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர்.

இலங்கை அரசை வலியுறுத்துக
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டும். இம்முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணுவதை உறுதி செய்யும் என்று நம்புகிறோம் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற திமுக எம்.பி. டி.ஆர். பாலு, இக்கடிதத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வழங்கினார்.

ராமநாதபுரம் மீனவர்கள் மனு
முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நல உரிமை சங்க தலைவர் ராயப்பன் தலைமையில் ஏராளமான மீனவர்கள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் நேரில் சென்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவின் போது தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக சென்று கலந்து கொண்டு அந்தோணியார் ஆசி பெற்று வருவது வழக்கம்.இதுதவிர இருநாட்டு மீனவர்கள் பரஸ்பர மீன்பிடி தொழில்முறை சம்பந்தமாக பேசி வந்துள்ளோம்.

சிறப்பு அனுமதி தாங்க..
இந்த நிலையில் வருகிற மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் மற்றும் மீனவ பக்தர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். எனவே ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழகத்திலிருந்து 200 மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்ள சிறப்பு அனுமதி பெற்று தர வேண்டும் என கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.