நான் ஏன் அதிகம் பேசுவதில்லை தெரியுமா? இதனால் தான்... முதலமைச்சர் ஸ்டாலின் தந்த விளக்கம்!
சென்னை: பேசுவதை குறைத்து செயலில் திறமையை காட்ட வேண்டும் என நினைப்பதால் தான், தாம் அதிகம் பேசுவதில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்.
பிப்ரவரி மாத ராசி பலன் 2022: கடக ராசிக்காரர்கள் கவனம்...சிம்மத்திற்கு ராஜ யோகம்
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகம் பேசுவதில்லை என கூட்டணிக் கட்சித் தலைவரான கே.எஸ்.அழகிரி மன வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் பேச்சு
திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், எல்லோரும் தன்னை இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்றும் நம்பர் 1 முதலமைச்சர் என்றும் பாராட்டுவதாகவும் ஆனால் தன்னை பொறுத்தவரை நம்பர் 1 மாநிலமாக தமிழகம் வர வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ஆட்சி செய்வதாகவும் தெரிவித்தார்.

அதிகம் பேசுவதில்லை
முதலமைச்சர் அதிகம் பேசுவதில்லை என கே.எஸ்.அழகிரி வருத்தப்பட்டு கூறியதை சுட்டிக்காட்டிப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பேசுவதை குறைத்து செயலில் திறமையை காட்ட வேண்டும் நினைப்பதால் தான் தாம் அதிகம் பேசுவதில்லை என விளக்கம் அளித்தார். மற்றபடி வேறு எந்த உள்காரணமும் கிடையாது என்பதை தோழமைக்கட்சி தலைவர்களுக்கு உணர்த்தினார். தன்னுடைய திறமையை செயல்பாடுகள் மூலம் காட்டி வருவதாக தெரிவித்தார்.

சுடச்சுட பதில்
திருமண விழாவில் கே.எஸ்.அழகிரி பேசிய சிறிது நிமிடத்தில் சுடச்சுட பதிலளித்து தன் மீதான குறைக்கு விளக்கம் அளித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உட்பட திமுக தோழமைக் கட்சிகள் எந்தளவுக்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றன என்பது தமக்கு நன்றாக தெரியும் என அவர் கூறினார். மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் இருக்கிறார் என்பதை விட தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்பது தான் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலகலப்பு
இதனிடையே முதலமைச்சர் தங்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார் என கே.எஸ்.அழகிரி குறைபட்டுக் கொண்டதும், அதற்கு அவர் விளக்கம் தந்ததும் மேடையில் இருந்தவர்களை கலகலப்பாக்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற திருமண விழாவாக டி.கே.எஸ். இளங்கோவன் இல்ல மணவிழா இருந்தது.