சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூச்சி முருகனை சிலர் 'பூச்சி' என அழைப்பார்கள்! நான் முருகன் என்று தான் அழைப்பேன்! ஸ்டாலின் பேச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் திமுக தலைமை நிலையச் செயலாளரும், வீட்டுவசதி வாரிய தலைவருமான பூச்சி முருகனின் இல்ல மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் பல சுவாரஸ்யமான தகவல்களை தனது உரையின் போது குறிப்பிட்டார்.

பூச்சி முருகனின் தந்தை சிவசூரியன், தன்னை நாடகத்தில் நாரதராக நடிக்க வைத்தார் என்றும் பூச்சி முருகனை சிலர் பூச்சி என கூப்பிடும் நிலையில் தாம் முருகன் என்றே அழைப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

4 வயது சிறுவனை கொலை செய்து.. பீரோவில் அடைத்து வைத்த கொடூர பெண்.. அப்படியே அரண்டு போன மக்கள்! 4 வயது சிறுவனை கொலை செய்து.. பீரோவில் அடைத்து வைத்த கொடூர பெண்.. அப்படியே அரண்டு போன மக்கள்!

இதனிடையே பூச்சி முருகனின் மகள் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு இதோ;

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

இந்தத் திருமணம் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டிருக்கிறது. என்ன கட்டுப்பாடு என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். கொரோனா என்கிற ஒரு தொற்று நோய் இன்றைக்கு நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நம்முடைய தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எந்த விதிமுறைகளை அதற்காக கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் அறிவுறுத்தி இருக்கிறோமோ, வலியுறுத்தி சொல்லி இருக்கிறோமோ அந்த கட்டுப்பாட்டிற்குள் நடக்கும் திருமணம், இந்தத் திருமணம்.

பாராட்டு

பாராட்டு

இது கொரோனா காலமாக இல்லாமல் இருந்திருந்தால் இங்கு மட்டுமல்ல, அண்ணா அறிவாலயத்தில் சூழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு, நிற்கக் கூட இடமே இல்லையென்ற நிலை நிச்சயம் உருவாகியிருக்கும்.எனவே அரசினுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இந்த திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கும் பூச்சி முருகன் அவர்களை நான் நெஞ்சார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், அதற்காக நான் நன்றி சொல்லவும் விரும்புகிறேன்.

சுருக்கமாக

சுருக்கமாக


அதனால்தான் வந்திருக்கும் அனைவரும் உரையாற்றிடாமல் அடையாளத்திற்கு நம்முடைய பொதுச் செயலாளர், நம்முடைய பொருளாளர், அதேபோல நான், அதுவும் சுருக்கமாக வாழ்த்திவிட்டு இந்த விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

பூச்சி முருகன் தந்தை

பூச்சி முருகன் தந்தை

பூச்சி முருகன் அவர்களைப் பற்றி நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள், தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். பூச்சி முருகனுடைய தந்தையார் மறைந்த திரு.சிவசூரியன் அவர்கள். அவர் தலைவர் கலைஞர் இடத்தில் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தார், அவருடைய திருமணத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கிறார்கள். நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முன்னிலை ஏற்று அந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். சிவசூரியன் திரைப்படத்தில் மட்டுமல்லாமல், கட்சியினுடைய பிரச்சார நாடகத்திலே நடித்திருப்பவர்.

நானே அறிவாளி

நானே அறிவாளி

அதில் எனக்கு என்ன சம்பந்தம் என்று கேட்டால், 'நானே அறிவாளி' என்ற ஒரு நாடகம். அந்த நாடகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவரே வேடமேற்று நடித்து இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, தலைவர் கலைஞர் நடிக்காமல் அதற்கு பதிலே பல நடிகர்களை எல்லாம் அதில் இணைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

முக்கிய பாத்திரம்

முக்கிய பாத்திரம்

அதில் சிவசூரியன் அவர்கள் ஒரு முக்கிய பாத்திரமேற்று நடித்தவர். அந்த நாடகம் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்தது. இடையிலே அதில் நாரதர் வேடமேற்ற காஞ்சிபுரம் பகுதியைச் சார்ந்த அண்ணாவிடைய நெருங்கிய நண்பராக இருந்த சி.வி.ராஜகோபால் நடித்திருந்தார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாடகத்தில் நடிக்க முடியாத சூழல் அவருக்கு ஏற்பட்டது.

நாரதர் வேடம்

நாரதர் வேடம்

அப்பொழுது அதற்கு பதில் யாரை நடிக்க வைத்தார்கள் என்று சொன்னால், என்னை தான் அதில் நடிக்க வைத்தார்கள். நான் தான் அந்த நாரதர் வேடம் ஏற்று நடித்தேன்.எனவே பூச்சி முருகன் அவர்களை எனக்கு தெரிவதற்கு முன்பு, அவருடைய தந்தை நடித்த அந்த நாடகத்தில், நானும் இணைந்து நடித்தேன் என்பது எனக்கு உள்ளபடியே பெருமையாக இருக்கிறது.

வரவேற்பார்

வரவேற்பார்

நம்முடைய அண்ணன் துரைமுருகன் அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார்கள், அறிவாலயத்திற்கு நானும், நம்முடைய பொதுச் செயலாளர், பொருளாளர், நம்முடைய கழக முன்னோடிகள் எல்லாம் வருகிற நேரத்தில், தவறாமல் எங்களை வரவேற்கும் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது பூச்சிமுருகன் தான் என்பதை நான் அழுத்தமாக குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

விசாரிப்பார்

விசாரிப்பார்

நம்முடைய பொதுச்செயலாளர் அவர்களே குறிப்பிட்டுச் சொன்னார், வரக்கூடியவர்களை எல்லாம் விசாரித்து, எதற்காக வந்திருக்கிறார்கள்? என்ன பிரச்சனைக்காக வந்திருக்கிறார்கள்? கட்சி பிரச்சினையா? அரசுப் பிரச்சினையா? அவர்களுடைய சொந்தப் பிரச்சினையா? அல்லது வட்டாரத்து பிரச்சினையை என்பதை எல்லாம் கேட்டு தெரிந்து முன்கூட்டியே அவர்கள் வந்திருக்கிறார்கள், இதற்காக வந்திருக்கிறார்கள் என்று என்னிடத்தில் சொல்லி ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி, அந்தப் பணியை மிகச்சிறப்போடு, நம்முடைய துறைமுகம் காஜா அவர்களுடைய துணையோடு, நம்முடைய பூச்சி முருகன் அவர்கள் ஆற்றுகின்ற பணி பாராட்டுக்குரிய ஒன்று.

நம்பர்-1 முதலமைச்சர்

நம்பர்-1 முதலமைச்சர்

நம்முடைய அன்பிற்குரிய பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பேசுகிறபோது, இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மாநிலத்தில் இருக்கும் முதலமைச்சர்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லி, ஒப்பிட்டுச் சொல்லி, அதில் முதல் முதலமைச்சராக - நம்பர்-1 முதலமைச்சராக இன்றைக்கு ஸ்டாலின் இருக்கிறார் என்று பெருமையோடு சொன்னார். என்னை பொறுத்தவரை நம்பர்-1 முதலமைச்சர் என்பதை விட நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் நிலை வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்த்துகிறேன்

வாழ்த்துகிறேன்

எனவே அப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில் முதலில் மணமக்களை வாழ்த்துவதற்கு முன்பு பூச்சி முருகனை வாழ்த்த வேண்டும். காரணம் என்னவென்று சொன்னால், முதலில் இங்கு பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்கள், வீட்டு வசதி வாரியத்தினுடைய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் நம்முடைய பூச்சி முருகனுக்கு உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

எனவே இன்றைக்கு அவருடைய அருமை மகள் கலைமாமணி, அதில் கலைமாமணி அவர்கள் பற்றிய இன்னொரு மகிழ்ச்சியான செய்தி விரைவில் நமக்கு வர இருக்கிறது. அவர் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற இருக்கிறார். அவர் ஐ.ஏ.எஸ்-ஆக வருகிறபோது நம்முடைய ஆட்சியிலேயே அவர் ஒரு பொறுப்பேற்று பணியாற்றும் அந்த வாய்ப்பும் அவருக்கு வரவிருக்கிறது. அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சீர்திருத்த திருமணம்

சீர்திருத்த திருமணம்

எனவே நடைபெற்றிருக்கும் இந்தத் திருமணத்தைப் பொறுத்த வரைக்கும், இது ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணமாக, தன்மானத்தோடு நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்தேறியிருக்கிறது.கொஞ்சம் நினைத்து பாருங்கள். 1967-க்கு முன்பு, இதுபோல சீர்திருத்த திருமணங்கள் நாட்டில் நடந்தால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1967-இல் முதல் முதலில் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று சட்டமன்றத்திற்குள் அண்ணா முதலமைச்சராக நுழைந்து, முதல் தீர்மானமாக சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை நம்முடைய அண்ணா அவர்கள் பெற்றுத் தந்தார்கள்.

பூச்சி மாதிரி

பூச்சி மாதிரி

இன்னும் ஒரு வேண்டுகோளையும் நான் இந்தத் திருமணத்தில் எடுத்து வைக்க விரும்புகிறேன். அந்த வேண்டுகோள் என்னவென்றால், நம்முடைய முருகன் அவர்கள் பெயருக்கு முன்னால் 'பூச்சி' என்ற ஒரு அடைமொழி ஒட்டிக்கொண்டிருக்கிறது. 'பூச்சி' என்றால் பூச்சி மாதிரி இருப்பார் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் விஷப் பூச்சிகளை, கொடுமையான பூச்சிகளை, அக்கிரமமான பூச்சிகளை ஒழிக்கிற அந்த நிலையிலிருந்து நம்முடைய பூச்சி முருகன் அவர்கள் தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 சிரித்த முகம்

சிரித்த முகம்

பூச்சி முருகன் அவர்களைப் பற்றி சொல்லவேண்டுமென்றால், எப்போது பார்த்தாலும் சிரித்த முகத்தோடு, இவரா இப்படி பணியாற்றுகிறார் என்று எண்ணும் அளவிற்கு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய பூச்சி முருகன் அவர்கள். எனவே அவருடைய பெயரை நாம் இன்றைக்குப் பூச்சி முருகன் என்றும், சிலர் பூச்சி என்றும் கூப்பிடுகிறார்கள். நான் பெரும்பாலும் பூச்சி என்று கூப்பிடுவது இல்லை. முருகன்.. முருகன்.. என்று தான் கூப்பிடுவேன். ஏனென்றால் முருகன் மீது நமக்கு அன்பு உண்டு, பாசம் உண்டு. துரைமுருகன் அவர்களைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

தமிழ் பெயர்

தமிழ் பெயர்

எனவே அப்படிப்பட்ட பெயரை பெற்றிருக்கும் பூச்சி முருகன் அவர்கள் இல்லத்தில் நடக்கும் இந்த மணவிழாவில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். அது என்னவென்று கேட்டால், உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்பது தான் அந்த வேண்டுகோள். உங்களுக்கு கூட ஒரு சந்தேகம் வரலாம். உன் பெயர் என்ன தமிழ் பெயரா? என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம். அது ஒரு காரணப் பெயர். அதற்கு நான் பல இடங்களில் விளக்கமாக சொல்லி இருக்கிறேன். பல பத்திரிகைகளில், செய்திகளில் படித்து நீங்களும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரையில் எங்களுடைய குடும்பத்தில் அது அண்ணனாக இருந்தாலும், தங்கைகளாக இருந்தாலும் எல்லா பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் தான். என் பெயர் மட்டும்தான் கொஞ்சம் வித்தியாசம். அதுவும் ஒரு காரணப் பெயர். கம்யூனிசக் கொள்கை மீது தலைவர் கலைஞர் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் அவர் இறந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக இந்தப் பெயரை எனக்கு சூட்டினார்கள்.

அய்யாதுரை

அய்யாதுரை

அந்தப் பெயரை சூட்டுவதற்கு முன்பு தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார் என்று சொன்னால், 'அய்யாதுரை' என்று தான் பெயர் சூட்ட நினைத்தார்கள். 'ஐயா' என்றால் யார் என்று தெரியும், தந்தை பெரியார். 'துரை' என்றால், அண்ணாவின் பெயருக்குப் பின்னால் வரும் துரை என்று சேர்த்து வைக்க வேண்டும் என்று கருதி இருந்தார்கள்.

பிறந்த தகவல்

பிறந்த தகவல்

ஆனால் ரஷ்யாவில் ஸ்டாலின் அவர்கள் இறந்தபோது, கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு துண்டு சீட்டை கலைஞர் இடத்தில் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார்கள். அந்த துண்டு சீட்டில் என்ன எழுதப்பட்டு இருந்தது என்று சொன்னால், உங்களுக்கு ஒரு பையன் - மகன் பிறந்திருக்கிறான் என்ற செய்தி.

தமிழ் பெயர்கள்

தமிழ் பெயர்கள்

அதைப் படித்துப் பார்த்த தலைவர் கலைஞர் அவர்கள் அங்கேயே எனக்கு பெயர் சூட்டினார்கள். எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான், அந்த மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறார், இது வரலாறு. என்னுடைய அண்ணன்கள் மு.க.முத்துவாக இருந்தாலும், அழகிரியாக இருந்தாலும், தம்பி தமிழரசாக இருந்தாலும், தங்கை கனிமொழியாக இருந்தாலும், செல்வியாக இருந்தாலும் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் தான். அதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது.

தமிழ் பற்று

தமிழ் பற்று

என்ன காரணம் என்றால், மு.க.முத்து - அவருக்கு அந்தப் பெயர் வைத்ததற்கு காரணம், என்னுடைய தாத்தா - தலைவருடைய தந்தை முத்துவேல் அவருடைய நினைவாக வைக்கப்பட்ட பெயர். அதேபோல அழகிரி - பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களைப் பார்த்துத்தான் நான் பேச்சாளராகவே ஆனேன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் நினைவாக அழகிரி என்று பெயர் சூட்டினார்கள். என்னுடைய பெயரை ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக தலைவர் கலைஞர் அவர்கள் என் தம்பிக்கு தமிழ் என்று பெயர் சூட்டினார்கள். இதுதான் வரலாறு.

அறிவுரை

அறிவுரை

எனவே இதை மனதில் வைத்துக் கொண்டு இன்றைக்கு மணமக்களாக வீற்றிருக்கும் நிச்சயமாக அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும்.எனவே அப்படிப்பட்ட தமிழை வளர்க்கின்ற முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், "வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக" வாழுங்கள்.. வாழுங்கள்.. என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

English summary
Cm Stalin full speech in Poochi murugan daughter marraige function
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X