விவசாய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதே.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டம்! இதோ விவரம்
சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சூப்பர் திட்டம் ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.
இதன் மூலம் விவசாய பெருங்குடி மக்கள் ஏராளமான பலன்களை இனி அறுவடை செய்யலாம்.
விவசாயிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டத்தின் விவரம் வருமாறு;
மேட்டூர் அணையை நாளை திறக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்...கடைமடை வரை தண்ணீர் சென்று சேருமா?

வரலாற்று சிறப்பு
தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின்அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

என்னென்ன பயன்?
இச்சீரிய திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே
நோக்கமாகும். 2021-22ஆம் ஆண்டில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை பழக்கூடைகள் மற்றும் ட்ரம்,
பழச்செடிகள், மரக்கன்றுகள் தொகுப்புகள் வழங்கப்படும்.

ஏராளமான பயன்கள்
மேலும், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை/குழாய்க்கிணறு அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், சிறுபாசன குளங்கள், குளங்கள், ஊரணிகள், வரத்து கால்வாய்கள் தூர்வாருதல் போன்ற செயல்பாடுகள் இக்கிராமப் பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்படும்.

வேளாண் வளர்ச்சி
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்ததுடன், பயனாளிகளுக்கு ஆழ்துளைக்
கிணறு அமைத்திட பணி ஆணை, தென்னங்கன்றுகள், தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திட ஊக்கத்தொகை, வரப்பு ஒரங்களில் பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள்
நட்டிட மரக்கன்றுகள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் கிணறு அமைப்பதற்கான பணி ஆணை, பண்ணைக் குட்டை அமைப்பதற்கான ஆணை, ஆகியவற்றை வழங்கினார்.