சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஞாயிற்றுக்கிழமையும் பரபரத்த கோட்டை... மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆய்வு..!

Google Oneindia Tamil News

சென்னை: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 5 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார்.

தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து, அம்முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர அறிவுறுத்தியுள்ளார்.

Cm Stalin review meeting on rain precautionary measures

இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்;

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (17.10.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் பரவலாகப் பெய்து வரும் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு 448 மி.மீ மழை இயல்பாகக் கிடைக்கப்பெறுகிறது. இது, தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவில் 47.32 விழுக்காடாகும். வடகிழக்குப் பருவமழை காலத்தில் புயல் மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாவதோடு, தொடர்புடைய சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை ஏற்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் இந்த பருவமழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. 16.10.2021 அன்று குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சராசரி மழை அளவைவிட அதீத கனமழை மற்றும் மிக கனமழை பெய்துள்ளது.

இந்த கனமழையால் கடந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 குடிசைகள் பகுதியாகவும், 3 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 2 நபர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 நபரும் உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 நிவாரண மையங்களில் 116 குடும்பங்களைச் சேர்ந்த 337 நபர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், திருகுருங்குடி மலையில் உள்ள நம்பி கோயிலுக்கு வழிபடச் சென்ற 500 பக்தர்கள், மலைப்பகுதியில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக நம்பியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினைத் தொடர்ந்து, கோயிலிலிருந்து வர இயலாத நிலையில், வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உதவியுடன் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இந்த மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட அளவில், பருவமழை காலத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில், 17.10.2021 முதல் 20.10.2021 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மழை சேதங்கள் குறித்துத் தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அடுத்துவரும் மழை காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து, அம்முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரவும், அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும் அறிவுரை வழங்கினார்.

முகாம்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள் / டெங்கு போன்றவை பரவாமல் இருக்கவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யவும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கவும்அறிவுறுத்தினார்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. தேவைப்படும் பொதுமக்கள் 1070 கட்டணமில்லாத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

English summary
Cm Stalin review meeting on rain precautionary measures
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X