எனது துபாய் பயணத்தை பற்றி வதந்தி! அரசியல் பிழைப்புக்காக கூவிக் கூவி அவதூறு! முதல்வர் ஸ்டாலின் சாடல்!
சென்னை: தனது துபாய் பயணம் முழு வெற்றியடைந்துள்ள நிலையில், அதை ஏற்க மனமில்லாமல் அரசியல் பிழைப்புக்காக சிலர் கூவிக் கூவி அவதூறு பரப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் பாஜகவை சூசகமாக விமர்சித்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது துபாய் பயணம் குறித்தும் அதன் மீது முன் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
மார்ச் 31-ம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து பேசுகிறேன்! திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

5 நாட்கள் பயணம்
5 நாட்கள் அமீரகத்திற்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள தமிழர்களின் தனிப் பாசத்திலும் பேரன்பிலும் மூழ்கித் திளைத்து - திணறி - திக்குமுக்காடி, அந்நாட்டு அரசு சார்பிலான அன்புகனிந்த மரியாதையைப் பெற்று, துபாய் - அபுதாபி தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு, தாய்மண்ணாம் தமிழ்நாட்டிற்கு அதிகாலையில் வந்திறங்கியபோது, சிறகடித்து முடித்துக் கூடு திரும்பும் தாய்ப் பறவையின் உணர்வினைப் பெற்றேன்.

பள்ளி விழா
பள்ளி விழாவில் கலந்துகொண்டு கைத்தட்டல்களையும் பாராட்டுதல்களையும் விருதுகளையும் பெறுகிற குழந்தை, வீடு திரும்பி அவற்றை தாயின் கைகளில் அளித்து, அம்மாவின் அன்பு முத்தங்களைப் பெற்று மகிழ்வது போல, 14 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய, 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் குறித்து ஊடகங்கள் வாயிலாக, தாயுள்ளம் கொண்ட தமிழ்நாட்டு மக்களிடம் தெரிவித்து மகிழ்ந்தேன்.

கூவிக் கூவி பிழைப்பு
முதலமைச்சர் என்ற முறையில் முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அரசியலுக்காக ஒருசிலர் அதை ஏற்காமல், அழுக்காறு மேலிட்டு, வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பினாலும், அவர்களின் மனசாட்சிக்கும் உண்மை நிலவரம் நன்றாகவே தெரியும். வெற்றியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டால், பிறகு எப்படி அவர்கள் அரசியல் கடை போட்டு, கூவிக் கூவி பிழைப்பு நடத்த முடியும்?

ஊடகங்கள் பாராட்டு
அவர்களால் பாராட்ட முடியாவிட்டாலும், நடுநிலை பத்திரிகைகள், ஊடகங்கள் பாராட்டுகின்றன. துபாயில் வெளியாகும் ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆங்கில ஊடகங்கள் பலவும் இந்தப் பயணத்தைப் பதிவு செய்துள்ளன. எனக்குக் கிடைத்த இந்த வரவேற்பும் பெருமையும் எனக்காகக் கிடைத்தது என்று கர்வம் கொள்ளும் மனநிலை எனக்கு எப்போதும் கிடையாது.

நம்பர் 1 மாநிலம்
என்னை முதலமைச்சராக்கிய தமிழ்நாட்டு மக்களுக்கும், இயக்கத்தின் முதன்மைத் தொண்டனான என்னைத் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டிருக்கிற கழக உடன்பிறப்புகளுக்கும் கிடைத்த பெருமை இது என்பதை மனதில் கொண்டே செயல்படுகிறேன். இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என்பதைவிட, இந்தியாவின் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்குவதே உங்களில் ஒருவனான எனது இலக்கு.