கடலூர்-நாகை-தஞ்சை-திருவாரூர் 5 மாவட்டங்களில் ஒரே நாளில் ஆய்வு; முதலமைச்சரின் பயண விவரம் இதோ!
சென்னை: மழைவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஒரே நாளில் 5 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இன்று மாலை சென்னையிலிருந்து புதுச்சேரி புறப்பட்டு சென்றுள்ள அவர், இன்றிரவு அங்கு தங்கிவிட்டு நாளை காலை கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு;
12.11.2021 (இன்று மாலை) சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்று இரவு புதுச்சேரியில் தங்குகிறார் முதல்வர்.
13.11.2021 நாளை காலை புதுச்சேரியிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு செல்கிறார் முதல்வர்.
கடலூரில் ஆரக்கமங்கலம், அடூர் அகரத்தில் ஆய்வு செய்துவிட்டு காலை 9 மணிக்கு சிதம்பரம் சென்ற்டைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சிதம்பரத்தில் காலை சிற்றூண்டியை சாப்பிடும் அவர் 9.30 மணிக்கு சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புறப்படுகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின், காலை 11.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறார்.
வேளாங்கண்ணியில் தேநீர் அருந்தும் அவர், பாதிப்பு அதிகம் உள்ள இடங்களான கருங்கனி, அருந்தவக்குளம் ஆகிய இரண்டு இடங்களை நாகை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
பிறகு அதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்துக்கு செல்லும் அவர் ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி கிராமங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.
பின்னர் மதியம் 2.30 மணிக்கு மன்னார்குடியில் மதிய உணவு சாப்பிடும் முதல்வர் 3.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை மாவட்டம் சென்றடைகிறார்.
பெரியக்கோட்டை என்ற இடத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பிறகு தஞ்சையிலிருந்து சாலைமார்க்கமாக காரில் நாளை மாலை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஒரே நாளில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை என 5 மாவட்டங்களில் புயல் வேகத்தில் முதலமைச்சர் நாளை ஆய்வு செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சரின் வருகையை ஒட்டி டெல்டா மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வரும் வாரத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.