இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்.. மிகச்சிறந்த பொதுவுடமைவாதியை இழந்தது தமிழகம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 89.

உடல் நலக்குறைவு காரணமாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 தினங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார் தா.பாண்டியன். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சிறுநீரக தொற்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் செயற்கை சுவாச கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று இரவு 10 மணி நிலவரப்படி தா.பாண்டியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில், பிப்ரவரி 26ம் தேதியான இன்று காலை, தா.பாண்டியன் காலமானார். இதை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. தா.பாண்டியன் தமிழகம் கண்ட சீனியர் அரசியல்வாதிகளில் ஒருவர். கம்யூனிச சித்தாந்தங்களில் மாறாத பற்று கொண்டவர்.
என் சிவப்பு துண்டை என்கிட்ட கொடுத்திருங்க.. செவிலியர்களிடம் கேட்டு வாங்கி தோளில் போட்ட தா பாண்டியன்
1989 முதல் 1996 வரை இருமுறை லோக்சபா உறுப்பினராக பதவி வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக 2005 முதல் 2015 வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே, தமிழகம் கண்ட மிகச்சிறந்த பொதுவுடமைவாதிகளில் ஒருவர் தா.பாண்டியன் என்று, அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தா பாண்டியன் உடல் அண்ணாநகர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 1 மணியளவில் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதியாக இரவு 7 .00 மணியளவில் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

தி.முக சார்பில் கழகப் பொருளாளரும் -நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் வி.கலாநிதி, எம்.பி., அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல் - அம்பத்தூர் தெற்கு பகுதிக் கழகச் செயலாளர் திரு. டி.எஸ்.பி. ராஜகோபால் ஆகியோர் சென்னை, முகப்பேரில் வைக்கப்பட்டிருந்த தா.பாண்டியன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செய்தியாளரிடம் பேசிய அப்துல் சமது, (பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி ), தன்னுடைய இறுதி காலம் வரை நாட்டின் அடித்தட்டு மக்களுடைய விடுதலைக்காக அவர்களுடைய மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டவர் தனது இடதுசாரி இயக்கத்தின் மூலமாக கொள்கைகளை சாதாரண சாமான்ய மக்களுக்கும் கொண்டு சேர்க்கக்கூடிய மண்ணுக்கேத்த அரசியலை மக்களுக்குத் தெளிவுபடுத்த தலைவர் தா பாண்டியன் நீண்ட காலமாக உடல் நலிவுற்று இருந்த நிலையிலும் இந்த உயிர் உடலை விட்டு பிரியும் வரை நாட்டினுடைய பாசிசத்திற்கு எதிராக உயிர்மூச்சு அடங்கும் வரையில் மக்களுக்காக பாடுபடுவேன் என எந்த சமரசமும் இல்லாமல் எதிர்த்தவர் இதனைத் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒரு பேரிழப்பு என தெரிவித்தார்.

தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், உலக அறிந்த இடங்களில் தமிழ் வளர்ச்சி உயர்த்திப் பேசியவர். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவருடன் இணைந்து தேர்தலில் பிரச்சாரங்களில் பங்கேற்றது எனக்கு நினைவிற்கு வருகின்றன. சாதாரண மக்களுக்கு உரியதான தலைவர் தா பாண்டியன். அவர் இழப்பு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பு. இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.