திமுக, கம்யூனிஸ்ட்களுக்கு செலக்டிவ் மதசார்பின்மை நோய் இருக்கு.. பாஜக வானதி சீனிவாசன் பரபர அறிக்கை
சென்னை : செலக்டிவ் மதச்சார்பின்மை நோய் காரணமாகவே, ராஜஸ்தானில் படுகொலையை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக தலைவர்கள் மவுனம் காப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, கடந்த மாதம் ஆங்கிலத் தொலைக்காட்சி விவாதத்தின்போது நபிகள் நாயகம் குறித்த சர்ச்சையான கருத்தை கூறினார். இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டன. பின்னர் நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது. இருந்தும், நுபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என்று இச்லாமியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த பாஜக... பின்னணியில் உள்ள 5 முக்கிய காரணங்கள் என்ன?

ராஜஸ்தான் படுகொலை
இதனிடையே சமூக வலைதளங்களில் நுபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. அப்படி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கண்ணையா லால் என்பவர், நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் 40 வயதான தையல்காரரான கண்ணையா லாலின் கடைக்கு வந்த இருவர் அவரின் தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அதில் ஒருவர் வெட்ட மற்றொருவர் அதை மொபைலில் வீடியோ பதிவு செய்வதும் பதிவாகியுள்ளது.

வானதி அறிக்கை
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தை சுட்டிகாட்டி பாஜக எம்எல்ஏ வானி ஸ்ரீநிவாசன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக தலைவர்களுக்கு செலக்டிவ் மதச்சார்பின்மை நோய் இருப்பதாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், அப்பாவி தையல் கடைக்காரர் கண்ணையா லாலை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதை வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட, ஒட்டுமொத்த நாடும், இந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த வீடியோவில், பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் அரசு மீது விமர்சனம்
ஜூன் 10-ம் தேதி கண்ணையா லாலை, ராஜஸ்தான் மாநில அரசு கைது செய்தது. தனக்கு 'ஸ்மார்ட் போன்' பயன்படுத்த தெரியாது என்று, அவர் போலீசாரிடம் கூறியிருக்கிறார். கடந்த 15ம் தேதி, ஜாமினில் வெளிவந்த அவர், தனக்கு கொலை மிரட்டல் வருவது குறித்து, காவல் நிலையத்தில் புகாரளித்தும், ராஜஸ்தான் மாநில அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செலக்டிவ் மதச்சார்பின்மை
அப்பாவியான தையல் கடைக்காரரை கைது செய்து, அவரை மத வெறியர்களுக்கு ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அடையாளம் காட்டியதே, இந்த கொடூரத்திற்கு காரணம். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், நுாபுர் சர்மா பேசியதற்காக, இந்திய நாடே மன்னிப்பு கேட்க வேண்டும் என, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்தன. ஆனால், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற செயலால், அப்பாவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டும், 'செலக்டிவ்' மதச்சார்பின்மை நோயால் பாதிக்கப்பட்ட தலைவர்கள், எதுவுமே நடக்காதது போல மவுனமாகி விட்டனர் என்று விமர்சித்துள்ளார்.