பிசுபிசுத்த காங்கிரஸ் போராட்டம்! திமுகவை பகைக்க விரும்பாத நிர்வாகிகள்! பின்னணி என்ன?
சென்னை: பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற அறப்போராட்டத்தில் திரளான தொண்டர்களோ நிர்வாகிகளோ கலந்துகொள்ளவில்லை.
இவ்வளவு ஏன், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கியத் தலைவர்கள் பலரே நேற்றைய தினம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
திமுகவுடன் சுமூக உறவை பேண வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பெரும்பாலான நிர்வாகிகள் நினைப்பதற்கு காரணம் அரசு ஒப்பந்தப் பணிகள் தான்.
ஏய்... பேட்டி கொடுக்குறேன், அப்றம் கத்துயா! காங்கிரஸ் தொண்டரிடம் டென்சனாகி சீறிய திருநாவுக்கரசர்

பேரறிவாளன் விடுதலை
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்றைய தினம் தமிழகம் தழுவிய அளவில் அறப்போராட்டம் நடைபெற்றது. இந்த அறப்போராட்டமானது அக்கட்சியின் மாநில தலைமை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது பேசு பொருளாகி உள்ளது. பெயருக்கு ஆங்காங்கு ஒரு சில நிர்வாகிகள் மட்டும் இந்த போராட்டத்தை நடத்தினார்களே தவிர மற்றபடி பெரியளவில் எந்த எழுச்சியும் இல்லை.

என்ன பின்னணி?
இதற்கு காரணம் எந்த சூழலிலும் திமுகவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்பதே பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது. திமுக ஆட்சி அமைத்து
ஓராண்டு நிறைவடைந்துள்ள இந்த சூழலில் தான், ஒப்பந்தப் பணிகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. கூட்டணி கட்சியின் ஆட்சி என்ற உரிமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அமைச்சர்களை சந்தித்து டெண்டர் எடுப்பதில் இப்போது தான்
தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

பகைக்க விரும்பவில்லை
இந்த சூழலில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடத்தி திமுகவையும் அமைச்சர்களையும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பகைத்துக் கொள்ள விரும்பவில்லையாம். இதனால் தான் நேற்று காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அறப்போராட்டம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையாம். இதனிடையேராஜீவ்காந்தியை காட்டிலும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு திமுகவும், ஸ்டாலினும் தான் முக்கியமாக போய்விட்டார்களா என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நேற்று கேள்வி எழுப்பியிருந்தது.

இரண்டு நிலைப்பாடு
ராகுல்காந்தியே மன்னிப்பதாக கூறிவிட்ட பிறகு பேரறிவாளன் விடுதலையை நாம் ஏன்
பெரிதுபடுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், இல்லையில்லை இதனை விடக்கூடாது
நமது எதிர்ப்பை பலமாக பதிவு செய்ய வேண்டும் என ஒரு தரப்பினரும் காங்கிரஸில்
உள்ளார்கள். இதனால் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் இரட்டை கருத்துக்கள்
காங்கிரஸ் முகாமிலேயே உள்ளன.