சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

EXCLUSIVE: அனுமதி கொடுத்தது பாஜக.. ஆனால் எய்ம்ஸுக்கான விதை போட்டது காங்.. சுதர்சன நாச்சியப்பன்

தோப்பூரில் எய்ம்ஸ் அமைய காரணம் காங்கிரஸ்தான் என சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய காரணமே காங்கிரஸ்தான்.. இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது பாஜகவின் வெறும் கண்துடைப்புதான் என்று சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததிலிருந்தே அதன் சலசலப்புகள் குறையவில்லை. பதவி முடிந்து அடுத்த தேர்தலுக்கு தயாரான நிலையில் மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உண்மையிலேயே யார் காரணம்?, இதன் பின்னணி என்ன என்பதை குறித்து அறிய ஒன் இந்தியா தமிழ் முற்பட்டது. எனவே இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனிடம் பேசினோம். அப்போது அவர் சொன்ன கருத்துக்கள்தான் இவை:

Congress is the main reason behind Madurai Aiims: Sudharsana Natchiappan

கேள்வி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நீண்ட காலம் கிடப்பில் போடப்பட என்ன காரணம் சார்?

வாஜ்பாய் காலத்தில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இந்த விஷயத்தில் சுணக்கம்தான் ஏற்பட்டது. 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, திரும்பவும் எய்ம்ஸ் அமைக்க முடிவானது. அதற்காக பல்வேறு மாநிலங்களில் 20 இடங்களைத் தேர்வு செய்து அறிவித்தது. அதில், ஒன்றுதான் மதுரை. ஆனால் பல்வேறு காரணங்களை சொல்லி சொல்லியே எய்ம்ஸ் திட்டம் செயல்படுத்த முடியவில்லை. அதன்பிறகு பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து நாங்கள் இதை பற்றி பலமுறை பேசினோம். கண்டிப்பாக மதுரையில் எய்ம்ஸ் வந்துவிடும் என்றுதான் உறுதி அளித்தார்கள். இப்படியே 4 வருடம் கடந்துவிட்டது.

கேள்வி: எத்தனையோ இடங்கள் இருக்கும்போது எதற்காக தோப்பூரை தேர்வு செய்ய வேண்டும்? ஏதாவது ஸ்பெஷல் காரணங்கள் இருக்கிறதா?

தோப்பூரில்தான் செலவு குறைவு. தமிழக அரசுக்கு இதில் ஒரு வேலையும் இல்லை, ஒரு செலவும் இல்லை. நிலம் ஆர்ஜிதம் செய்யவேண்டிய அவசியம்கூட இல்லை. ஏனெனில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் வேண்டும் என்பதற்காக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தினார் காமராஜர். அதனால் இருக்கிற நிலத்தில் அப்படியே மருத்துவமனையை கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான். மேலும் தென் மாவட்டத்தில் இப்படி ஒரு மருத்துவமனை வேண்டும் என்பது ஒரு கட்டாய தேவையாகவும் இருப்பதால்தான் தோப்பூரை தேர்வு செய்ய வேண்டிவந்தது.

கேள்வி: நீண்ட காலம் கழித்து இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதே?

இது ஒரு சந்தர்ப்பவாத அரசியல். எப்போதிலிருந்தோ நாங்கள் கோரிக்கை வைத்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு நாள் செய்யாமல் இப்போது வந்து ஒப்புதல் தருவது என்பது தேர்தல் அரசியலைதான் காட்டுகிறது. அதனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாங்கள்தான் முழு காரணம் என்று பாஜக சொல்ல எந்தவித உரிமையும் இல்லை. இதற்கு காரணம் எல்லாமே அந்த காலத்திலிருந்து இப்போது வரை காங்கிரசின் முயற்சிதான்.

கேள்வி: மத்திய அமைச்சரவைதான் இதற்காக ரூ.1258 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறதே?

இந்த நிதி எதற்கு போதுமானதாக இருக்கும்? வேண்டுமானால் இதை வைத்து கொண்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொள்ள பயன்படுமே தவிர, மருத்துவமனை முழுமையாக அமைக்க இந்த நிதி போதாது. நவீன வசதிகள், நவீன இயந்திரங்கள், என எத்தனையோ நவீனங்களை மருத்துவமனைக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது. அதனால் இன்னும் 3 ஆயிரம், 4 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால் அவ்வளவு தொகையை பாஜக இப்போது ஒதுக்கவும் செய்யாது. அடுத்த அரசு மத்தியில் அமைந்த பிறகுதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனால் எய்ம்ஸ் மருத்துவமனையை பாஜக கட்டி முடிக்காது.

கேள்வி: அப்படியென்றால் தோப்பூரில் அமைய போகும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முழு காரணம் காங்கிரஸ்தானா?

கண்டிப்பாக. 1956ல் இந்திய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மிகப்பெரிய அளவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் டெல்லியில் கொண்டுவரப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் எய்ம்ஸ் அதாவது 'இந்த ஆராய்ச்சி நிலையம் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்' என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனை அடிப்படையாக வைத்துதான், கர்ம வீரர் காமராஜர் இதற்காக 600 ஏக்கர் நிலத்தை கையப்படுத்தி வைத்தார். அந்த நிலத்தில்தான் இப்போது எய்ம்ஸ் வரப்போகிறது. அதனால்தான் இந்த மருத்துவமனை அமைய காரணமாக இருந்த காமராஜர் பெயரை அந்த வளாகத்துக்கு சூட்ட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையை வைத்து வருகிறோம். இவ்வாறு வழக்கறிஞரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

English summary
Sudharsana Natchiyappan says that Former Chief Minister Kamaraj is the real reason behind Madurai AIIMS. And he also added, the hospital premises should be named Kamarajar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X