வட இந்தியாவில் செய்வதை... தமிழகத்தில் செய்யாதீர்கள்... பாஜகவுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
சென்னை: வட இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல் செய்வதை போல் தமிழகத்திலும் பாஜக அரசியல் செய்ய முனைவது அநாகரீகமானது என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.
மத அரசியல், வெறுப்பு பிரச்சாரங்களை செய்யும் பா.ஜ.க. வினரை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
பிப்.1ம் தேதி பள்ளிகள் திறப்பு.. 4 நாள்தான் இருக்கிறது.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தஞ்சை மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலைக்கு முயன்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். இறந்த மாணவி பயின்ற வந்த பள்ளியானது 160 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது என்றும், மாணவிகளின் நலன் கருதி 90 ஆண்டுகளாக விடுதியுடன் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

பள்ளி அறிக்கை
மாணவியின் இறப்புக் குறித்து போலீஸாருக்கும், கல்வித்துறைக்கும், சட்ட விசாரணைகளுக்கும் எப்போதும் நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம் என்றும், அரசியலுக்காக ஒரு சில பிரிவினர் திசை திருப்புவது வருத்தம் அளிக்கிறது என்று பள்ளியை நிர்வகிக்கும் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் விளக்கம்
மேலும், மாணவியின் தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். மாணவி தற்கொலை தொடர்பாக காவல்துறை விசாரணை மட்டுமின்றி பள்ளிக் கல்வித் துறை சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்துள்ளார்.

கிராம மக்கள்
பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக கூறுமாறு சிலர் ஊருக்குள் வந்து எங்களை வற்புறுத்துகின்றனர். எங்களது பிள்ளைகளும் அந்த பள்ளியில்தான் படிக்கின்றனர். இதுவரை மதம் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், எங்களின் ஒற்றுமையை சீர்குலைத்திட முயற்சி நடக்கிறது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி மைக்கேல்பட்டி கிராம மக்கள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (28.01.2022) புகார் மனு அளித்துள்ளனர்.

அரசியல் ஆதாயம்
மைக்கேல்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் இருந்தும், இறப்புக்கு முன் அந்த மாணவி பேசியதாக சொல்லப்படுகிற காணொளி காட்சிகளிலும் எந்தவகையிலும் மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தப்பட்டார் என்று எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று தெரிகிறது. ஆனால், பள்ளி நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் ஊர்மக்கள் கொடுக்கிற எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாமலும், விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் இருப்பது தெரிந்தும், வேண்டுமென்றே திட்டமிட்டு பா.ஜ.க.வினர் அரசியலுக்காக தற்கொலையை திசை திருப்பி, ஆளும் தமிழக அரசின் மீது அவதூறு பரப்ப செய்கின்ற முயற்சி இது என்று கண்கூடாக தெரிகிறது.

கண்டனம்
வட இந்தியாவில்தான் பா.ஜ.க.வினர் அப்பட்டமாக மத அரசியல் செய்கிறார்கள் என்றால், அதே கலாச்சாரத்தையும் தமிழ்நாட்டிலும் செய்ய துணிவது மிக ஆபத்தான அநாகரிகமான அரசியல். இப்படிப்பட்ட மத அரசியல், வெறுப்பு பிரச்சாரங்களை செய்யும் பா.ஜ.க. வினரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.