திமுகவிடம் 4 மேயர் சீட் கேட்கும் காங்... எப்போது பேச்சுவார்த்தை? காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகளை தங்களுக்கு திமுக ஒதுக்க வேண்டும் என்பது காங்கிரஸின் எதிர்பார்ப்பாம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடப்பங்கீடு தொடர்பாக திமுக தலைமை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருக்கின்றனராம் கூட்டணி கட்சித் தலைவர்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை எதிர்கொள்ள தமிழகததின் அனைத்து அரசியல் கட்சிகளும் கோதாவில் இறங்கி விட்டன. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, விருப்ப மணுக்கள் வாங்கும் பணியில் பிரதான கட்சிகள் வேகம் காட்டுகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. திமுகவை முந்தி வேகம் எடுக்கும் அதிமுக.. பரபர அறிவிப்பு

காத்திருக்கும் கட்சிகள்
இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளின் தலைவர்களோ, தங்களை அழைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஊராக உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில், திமுகவின் மா.செ.க்கள் மூலம் கசப்பான பல விசயங்களை எதிர்கொண்டார்கள் கூட்டணி கட்சியினர்.

முதல்வருடன் ஆலோசிக்க விருப்பம்
அதே போல, ஒரு மினி தேர்தல் போல நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடக்கக் கூடாது என்பது கூட்டணி தலைவர்களின் தவிப்பு. அதனால் திமுக மா.செ.க்களிடம் பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசி தங்களுக்கான கௌரவமான சீட் எண்ணிக்கைக்கு உத்தரவாதத்தை வாங்கிவிட வேண்டும் என கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நினைக்கின்றனர்.

திமுக நிலைப்பாடு
அதற்காகவே ஸ்டாலினிடம் இது குறித்து விவாதிக்க, அவரிடமிருந்து அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறார்கள். திமுக தலைமையைப் பொறுத்த வரை, நிலுவையிலிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் எப்படி சீட்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு மாவட்ட திமுகவினர் பகிர்ந்தளித்தார்களோ அப்படியே இந்த முறையும் நடக்க வேண்டும் என நினைக்கிறது. ஆனால், காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய 3 கட்சிகளும் மேயர் சீட்டை குறிவைத்து காத்திருக்கிறார்கள்.

4 மாநகராட்சி கேட்கும் காங்கிரஸ்
குறிப்பாக, 21 மாநகராட்சிகளில் திருச்சி, தஞ்சை, நெல்லை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, வேலூர், ஓசூர், ஈரோடு, திருப்பூர் ஆகியவற்றிலிருந்து 4 மாநகராட்சி மேயர் சீட் வேண்டும் என எதிர்பார்க்கிறது காங்கிரஸ் கட்சி. அதாவது, வடக்கு, மேற்கு, தெற்கு , மத்திய ஆகிய 4 மண்டலங்களில் தலா ஒரு மேயர் சீட் வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதேபோல, மதிமுகவும் விசிகவும் தலா 1 மேயர் சீட்டை கைப்பற்றியாக வேண்டும் என துடிக்கிறது. ஆனால், 21 மாநகராட்சிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டும் என திமுக அமைச்சர்கள் வலியுறுத்துகின்றனராம். தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் கூட்டணி கட்சிகளின் விருப்பத்தை திமுக சமாளித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.