காங்கிரஸ் 15 சீட்ல ஜெயிச்சாலே பெருசு.. எதுக்கு அதிக தொகுதி கேட்குறீங்க.. மணிசங்கர் அய்யர் ஒரே போடு!
சென்னை: காங்கிரஸ் கட்சி 15 முதல் 20 தொகுதிகள் வரைதான் வெற்றி பெற வாய்ப்புள்ளது, அதுவே பெரிய விஷயம் தான் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைமையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், கடந்த முறை 41 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் கொடுத்தார் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி. ஆனால் வெறும் 8 தொகுதிகளில் மட்டும்தான் காங்கிரஸ் வென்றது.
இது மக்கள் பிரச்னை.. இதை பத்தி கண்டிப்பா பேசியே ஆகனும்.. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி

சீட் வாங்க கடும் இழுபறி
திமுக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. எனவே, இந்த முறை காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யக் கூடாது என்பதில் திமுக தலைமை மிக மிக உறுதியாக இருந்தது. அதன் விளைவாகத்தான் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கட்டத்தில் கண்கலங்கி விட்டார் என்று கூட செய்திகள் வெளியாகின. இதுபற்றி அவரிடம் கேட்டபோது கண்கள் என்று இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும் என்று பூடகமாக பதிலளித்தார்.

25 தொகுதிகள்
இப்படியான பெரும் சர்ச்சைகளுக்கு நடுவே, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிப்பு வெளியானது. 25 சட்டசபை தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர கன்னியாகுமரி லோக்சபா தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மணிசங்கர் அய்யர்
குறைந்த தொகுதிகளை ஒதுக்கி விட்டதாக காங்கிரஸில் சில நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வேறுமாதிரி சொல்லியுள்ளார். அவர் டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 15 முதல் 20 தொகுதிகள் வரை வெற்றி பெற்றால் அது பெரிய விஷயம். எனவே கூடுதலாக தொகுதிகளை பெற்றுக்கொண்டு கூடுதல் இடங்களில் தோற்றுப் போவது நல்லது கிடையாது.

காங்கிரஸ் பலம்
மேலும், வெற்றியை உறுதி செய்யும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிந்து அவர்களை மட்டும் தான் களத்தில் நிறுத்த வேண்டும். இவ்வாறு மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன என்பதை அந்தக் கட்சியின் தலைவர் ஒருவரே சுயமாக ஒப்புக் கொண்டதைப் போன்று இந்த பேட்டி அமைந்து உள்ளது என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் மற்ற கட்சித் தலைவர்கள்.