58 நாட்களுக்கு பிறகு.. சென்னையில் குபீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. நாடு முழுக்க கிடுகிடு உயர்வு
சென்னை: இந்தியாவில் கொரோனா கேஸ் எண்ணிக்கை 1,11,92,088 ஆக உயர்ந்துள்ளது. 36 நாட்களுக்குப் பிறகு நாட்டில் 24 மணி நேர இடைவெளியில் 18,000 க்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. சென்னையிலும் கொரோனா அதிகரித்துள்ளது.
செயலில் உள்ள கேஸ்கள் தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரித்துள்ளன. மேலும் 24 மணி நேரத்தில், 108 இறப்புக்களுடன் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,57,656 ஐ எட்டியுள்ளது. ஒரே நாளில் மொத்தம் 18,327 புதிய கேஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 29 அன்று, 24 மணி நேர இடைவெளியில் 18,855 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதன் பிறகு தினசரி புதிய நோயாளிகளின் அதிகரிப்பு 18,000 க்கும் குறைவாகவே இருந்தது. இப்போதுதான் அது அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகம்
கொரோனா நோயிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,08,54,128 ஆக உயர்ந்துள்ளது. தேசிய கோவிட் -19 மீட்பு 96.98 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.41 சதவீதமாக உள்ளது. 108 புதிய கொரோனா இறப்புகளில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 53 பேரும், கேரளாவைச் சேர்ந்த 16 பேரும், பஞ்சாபில் இருந்து 11 பேரும் அடங்குவர்.

தமிழகம் 2வது இடம்
நாட்டில் இதுவரை 1,57,656 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 52,393 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 12,513 பேரும், கர்நாடகாவிலிருந்து 12,354 பேரும், டெல்லியில் இருந்து 10,918 பேரும், மேற்கு வங்கத்திலிருந்து 10,275 பேரும், உத்தரப்பிரதேசத்திலிருந்து 8,729 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த 7,172 பேரும் உள்ளனர். 70 சதவீதத்திற்கும் அதிகமான இறப்புகள் கொமொர்பிடிட்டி- அதாவது இணை நோய் உள்ளவர்களுக்கு ஏற்பட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

கிடுகிடு உயர்வு
சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 225 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. கடந்த 58 நாட்களுக்கு பிறகு, இது தான் மிக அதிகமாகும். ஒட்டுமொத்த தமிழகத்தில் 543 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன.

சென்னையில் கொரோனா
சென்னையில் இதற்கு முன்பாக ஜனவரி 6ஆம் தேதி 228 கேஸ்கள் ஒரேநாளில் பதிவாகியிருந்தது. இதற்கு அடுத்தபடியாக இப்போதுதான் மிக அதிகமான கேஸ் பதிவாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் மிகவும் நெருக்கமாக பழகுவது, நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உருமாறிய கொரோனா பரவல், நாடு முழுக்க நோய் பரவல் அதிகரிக்க மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.