சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா... 59.71% ஆண்கள் பாதிப்பு - பெண்கள் 40.29% பேர் பாதிப்பு
சென்னை: சென்னையில் ஒரே நாளில் 1500 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அதிகமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71 சதவிகிதம் பேரும் பெண்கள் 40.29 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை சென்னையில் 2,57,851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2,42,880 பேர் பூரணமாக குணமடைந்து உள்ளனர். 10685 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4286 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் அதிகமாக 30 முதல் 39 வயதினர் 20.14%, 40 முதல் 49 வயதினர் 18.37%, 50 முதல் 59 வயதினர் 17.97%, 20 முதல் 29 வயதினர் 17.93%, 60 முதல் 69 வயதினர் 11.13% பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தப்பட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71%, பெண்கள் 40.29% பேரும் அடங்குவர் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா... அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் மதுரை மாநகராட்சி..18 தெருக்கள் மூடல்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
புரசைவாக்கம், வேப்பேரி, சூளைமேடு, கொளத்தூர், அண்ணாநகர், முகப்பேர், மாதவரம், ராயப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த காய்ச்சல் பரிசோதனையில் காய்ச்சல், தலைவலியுடன் அவதிப்பட்டவர்களை உடனடியாக மாநகராட்சி பணியாளர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி சிகிச்சை பெற அறிவுறுத்தினார்கள்.
3 நாட்களுக்கு மேல் காய்ச்சலுடன் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து அவர்களை பரிசோதனைக்காகவும் அனுப்பி வைத்தனர்.