அதிகரிக்கும் கொரோனா..சென்னையில் மாஸ்க் கட்டாயம்.. வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிரடி
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2500ஐ கடந்து பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 2,672 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் 1,072 பேருக்கும், செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோயம்புத்தூரில் 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறுபடியும் வேலையைக் காட்டிய கொரோனா! சற்றே உயர்ந்த இன்றைய பாதிப்பு! பலி எண்ணிக்கை மட்டும் இவ்வளவா?

கொரோனோ அதிகரிப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.

முக கவசம் அவசியம்
அந்த வகையில், சென்னையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது. வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநாகராட்சி கூறியுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்
மேலும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக்கடைகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அபராதம்
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கோவிட் வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.