மாணவர்கள் முதல்.. WFH ஐடி ஊழியர்கள் வரை.. கொரோனா கால மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
சென்னை: கொரோனா பரவல் உச்சத்தை எட்டி இருக்கிறது. தொற்றுக்கு தகுந்தமாதிரி கட்டுப்பாடுகள் கடுமையாகி வருகின்றன. இதனால் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
கொரோனா மூன்றாவது அலை மீண்டும் உலகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. வேலைக்கும் பள்ளிக்கும் செல்லாமல் மீண்டும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நேரத்தில் மன உளைச்சல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாணவர் முதல் அனைவருக்குமான பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விவரிக்கிறார் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.
''கொரோனாவால் முதலில் பொதுமுடக்கம் வந்தபோது, அனைத்து துறையினருமே திண்டாடித்தான் போனோம். உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும்போது பதட்டம், பயம் இதனால் மன அழுத்தம் பலருக்கு ஏற்பட்டது. இதையெல்லாம் தாண்டி இப்போது நாம் வந்துவிட்டோம். ஆனால் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் பள்ளிகள் செயல்படவில்லை. நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்துவிட்டன. ஆன்லைனில் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
பேண்டமிக்கே மாறலாம்! வெள்ளை எலிகளிடம் கொத்து கொத்தாக பரவிய கொரோனா.. காத்திருக்கும் சிக்கல்!

முன்னெச்சரிக்கை
இந்நிலை எப்படி போகும் என்று சொல்லமுடியாது. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். கொரோனா வராமல் தடுக்க எப்படி மாஸ்க் அணிந்து தற்காத்துக் கொள்கிறோமோ, அதேபோல் கொரோனா காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதுவந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வர வேண்டும்.

குழந்தைகள்
கொரோனா காலத்தில் தங்கள் இயல்புகளையே இழந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். சின்னக்குழந்தைகள் பள்ளிக்கு சென்றே இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எப்போதும் ஆன்லைன் க்ளாஸ் எடுப்பதால், பல குழந்தைகளுக்கு கல்வி பிரச்சனையாகவே இருக்கிறது. சில குழந்தைகள் பெற்றோர் சொல்லிக்கொடுத்து படிக்கும். சில குழந்தைகள் ஆன்லைன் வகுப்பை விளையாட்டாகவே பார்த்து வருகின்றன.

கல்வி
இதனால் கல்வி குறித்த சீரியஸ் தன்மை அவர்களுக்கு இல்லாமல் போகிறது. அதேபோல் வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பதால் பல குழந்தைகள் விளையாட்டையே மறந்து இருப்பார்கள். போன், டி.வி என்று கேட்ஜட்ஸ் கூடவே பழக்கப்பட்டு வருகிறார்கள். இடையே பள்ளி திறந்தபோது, பாதி மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்று குற்றம் சொல்லின. கற்றல் குறைபாடு இருப்பதாக கூறின. இப்படி சொல்வது தவறு.

கவலை வேண்டாம்
குழந்தைகளிடம் இதை குறைபாடாக பார்க்கக்கூடாது. இரண்டு வருடங்களாக வேறு ஒரு மனநிலைக்கு பழக்கப்பட்ட குழந்தைகள் மெதுவாகத்தான் பழைய நிலைக்கு வருவார்கள். குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்று கவலை வேண்டாம். அவர்களுக்குத் தேவையான ஊக்கமும் நேரத்தையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கொடுக்க வேண்டும். மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டதால், ஆன்லைனில் மீண்டும் மூழ்கியிருக்கிறார்கள். பெரியவர்களாலே இப்படி மாறி மாறி வேலை பார்ப்பது சிரமம்.

நேரம்
இதை நாம் குழந்தைகளிடம் எப்படி எதிர்பார்ப்பது. அவர்களுக்கான நேரத்தைக் கொடுத்து, ஆரோக்கியமான சூழலைக் கொடுக்க வேண்டும். சின்ன சின்ன வேலைகள் கொடுத்து அவர்களை எப்போதும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு வீட்டு வேலைகள் சொல்லிக் கொடுக்கலாம், மரம் வளர்க்க சொல்லிக் கொடுக்கலாம். கூட்டம் குறைவாக இருக்கும் இடங்களுக்கு பாதுகாப்போடு அலைத்துச் செல்லலாம். அப்போதுதான் குழந்தைகள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

மீண்டும் பள்ளிகள் திறப்பு?
வெளிநாடுகளில் இரண்டாவது அலை நடந்துகொண்டிருக்கும்போதே, பள்ளிகள் திறக்கப்பட்டன. தடுப்பூசிகள் அதிகம் போடப்பட்டதும் இதை சில நாடுகள் செயல்படுத்தின. பள்ளிக்கு வரும் குழந்தைகளில் யாருக்காவது ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அந்த வகுப்பை மட்டும் ஐசோலேட் செய்வார்கள். இதனால் குழந்தைகள் பள்ளிக்கு வருவது தொடர்ந்தது. இதை நாமும் கடைபிடிக்கலாம். பள்ளிக்கு சென்று வருவதால் மாணவர் மனநலன் அதிகரிக்கும்.

மனதைரியம்
கொரோனா யாரும் எதிர்பார்க்காதது தான். இதனால் பலருக்கு தொழில் பாதிக்கப்படும். இதனால் மனமுடைந்து ஒதுங்கி இருக்கிறார்கள் பல வியாபாரிகள்.
மனம் தளராமல் இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். கடந்த ஊரடங்கைப் போல் இல்லாமல், இப்போது நிலமை கொஞ்சம் நன்றாக இருக்கிறது. தொழில் செய்யும் அனைவரும், இந்த தொற்று காலத்தை மன உறுதியோடு கடக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டாலும், இதை நாம் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை வர வேண்டும். கொரோனா காலத்தில் நஷ்டத்தை சந்தித்த பல தொழில்கள் இன்று நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் பொறுமையும் மன தைரியமும் இருந்தால், இந்த கொரோனா காலத்தை எளிதாகக் கடக்கலாம்.

கவலை வேண்டாம்
ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்திருப்போம். சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த வேலை நமக்கு இல்லாமல்போகும். நமக்கு அந்த ஒரே ஒரு பொருளாதார வருவாய் தான் இருந்திருக்கும். அது இல்லாமல் போகும்போது, உலகமே இருண்டதாக நீங்கள் நினைப்பீர்கள், அதுதான் தவறு. பெரிய உலகத்தில் உங்களுக்கான வேலை நிச்சயம் இருக்கும். வேறு வேலை கிடைக்கும் என்ற மனநிலை நமக்கு வரவேண்டும். அந்த தைரியம் கிடைக்கும் போது, வேறு வேலைக்குச் சென்று வருவாய் ஈட்டலாம். நேரம் கூடிவரும்போது நீங்கள் எதிர்பார்த்த வேலை நிச்சயம் கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் மன தைரியத்தைக் கைவிடக்கூடாது.

சேமிப்பு
பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க சேமிப்பு பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். நம் கையில் கொஞ்சம் பணம் இருந்தால், மனது தைரியமாக இருக்கும். தொற்று காலத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு மெடிக்கல் இன்சியூரன்ஸ் எடுக்கலாம். இதெல்லாம் நமக்கு ஆதரவாக சமயத்தில் கைகொடுக்கும். மன அழுத்தம் குறையவில்லை என்றால், மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டுப் பேசுங்கள். மற்றவருக்கும் ஆதரவாய் இருங்கள். எளிதாக இந்த பெருந்தொற்றைக் கடக்கலாம்'' .