சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"காங்கோவில் 350 பேர் சிக்கியிருக்கோம்.. காப்பாத்துங்க" கண்ணீர் மல்க கோரிக்கை.. ரவிக்குமார் ஆறுதல்

காங்கோவில் சிக்கியிருக்கும் தங்களை மீட்க வேண்டும் என எம்பி ரவிக்குமாருக்கு கடிதம் வந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "ஐயா.. நாங்கள் மொத்தம் 350 தமிழர்கள் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் சிக்கி கொண்டுள்ளோம்.. காங்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு.. நோய்த்தொற்று அதிகமாகும்போது எல்லோருக்கும் மருத்துவம் கிடைக்கும் என்பதற்கு இங்கு உத்தரவாதமில்லை... எங்களை எப்படியாவது மீட்க நடவடிக்கை வேண்டும்" என்று விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமாருக்கு காங்கோவில் சிக்கியுள்ள தமிழர்கள் கடிதம் மூலம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கடிதத்தை கண்ட ரவிக்குமார், "எல்லாரும் பத்திரமா, பாதுகாப்பா இருங்க.. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் பரிந்துரை செய்கிறேன்" என்று அவர்களுக்கு உடனடி நம்பிக்கை அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு குறித்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தன்னுடைய தொகுதியில் விடாமல் மேற்கொண்டு வருகிறார் விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமார்... தினந்தோறும் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும் உடனுக்குடன் தன்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்திலும் அப்டேட் என்ற தலைப்பில் வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ரவிக்குமாருக்கு ஒரு கடிதம் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இருந்து வந்துள்ளது.

 coronavirus: 350 tamil people suffered in congo african country

உலகம் முழுதும் கொரோனா பீடித்துள்ள நிலையில் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.. இதனால் காங்கோவில் நம் தமிழர்கள் 350 பேர் சிக்கி கொண்டு தவித்து வருகிறார்கள்.. அவர்களின் சார்பாக சௌந்தரராஜன் என்பவர் இந்த கடிதத்தை ரவிக்குமாருக்கு எழுதி, தங்களை மீட்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கடிதம் இதுதான்:

"மதிப்பிற்குரிய அய்யா முனைவர்.ரவிக்குமார் அவர்களுக்கு வணக்கம். நான் சௌந்தரரரசன், காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் தலைநகர் கின்சாசாவிலிருந்து இந்த மடலை எழுதுகிறேன். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றுகளிலிருந்து விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களையும் ஏனைய தமிழ் மக்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மத்திய,மாநில அரசுகளோடு சேர்ந்தும் தனிப்பட்ட முறையிலும் அக்கறையோடு தாங்கள் செய்துவரும் பணிகளைத் தொடர்ந்து படித்துப் பார்த்து அறிந்து வருகிறேன்.

குறிப்பாகத் தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவிகள் அனைத்தும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களில் வசிப்போருக்கும் சென்று சேர தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்ளபடியே பாராட்டத் தகுந்தது. ஏழை எளிய தமிழ்நாட்டு மக்களினும் எளிய, வறிய வாழ்வு வாழ்ந்து வரும் அம்மக்களுக்கு செய்து வரும் உதவிகளுக்கு நன்றிகள்.

தொகுதி மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் உதவிகள் புரிந்துவரும் தங்களிடம் வெளிநாடு வாழ் தமிழர்கள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள் சார்பாக சில கோரிக்கைகள் தங்களிடம் கோரிக்கை வைக்க விரும்புகிறேன். முதலில் இங்கிருக்கும் சூழலை தங்களுக்கு அறியப்படுத்துகிறேன்.

நாங்கள் வாழும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் தலைநகர் கின்சாசா அடுத்த பெரிய நகரமான லுபாம்பாசி மற்றும் இன்னபிற நகரங்களில் 300லிருந்து 350 தமிழர்கள் பணி நிமித்தமாக வாழ்ந்து வருகிறோம். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சேர்த்து 80- 90 பேர்கள் இருக்கிறார்கள். கடந்த மார்ச் 10 முதல் இங்கே வெளிநாட்டு பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டன. ஆனாலும் அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா போன்ற நாடுகள் தங்களது நாட்டு மக்களை விமானங்கள் கொண்டு திரும்ப அழைத்துச் சென்றன.

அப்போதே நாங்களும் இந்தியா திரும்ப கோரிக்கை வைத்து தமிழக, இந்திய அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் இந்தியாவில் மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் ஏப்ரல் 15 முதல் மே 3 வரை நீட்டிக்கப்பட்டதால் வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படவில்லை.தற்போது ஊரடங்கு முடிய இருக்கும் தருவாயில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப அனுமதியளிப்பது தொடர்பாக மாநிலக்க அரசுகள் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளன. கேரள மாநில அரசு தங்கள் மாநில மக்கள் நாடு திரும்ப மத்திய அரசிடம் விமானங்கள் தரையிறங்க அனுமதி கேட்டு இருக்கிறது.

அதுபோல மும்பை,டெல்லி,அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து இந்தியர்களை அழைத்து செல்ல சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக பெண்கள் மற்றும் குழந்தைகளை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டியுள்ளதால் நமது மாநில மக்களுக்கு மும்பை,டெல்லி போன்ற நகரங்களுக்கு செல்வது சரியாக வராது, அங்கே தடுக்கப்பட்டு முகாம்களில் இருக்க வைக்கப்பட்டால் அவர்களின் நிலைமை இங்கிருப்பதை விட சிக்கலாகும்.

இந்த நாட்டில் முதலில் குறைவாக இருந்த கொரோனாத் தொற்று தற்போது 491 பேர் பாதிப்பு மற்றும் 1 இந்தியர் உட்பட 30 பேர் மரணம் என்று தொடர்கிறது. பக்கத்திலிருக்கும் காங்கோ குடியரசு நாட்டிலும் 207 பாதிப்புகள் மற்றும் 8 பேர் மரணம் என்று தொடர்கிறது. இந்தியாவை ஒப்பிடும்போது நோய்த்தொற்று குறைவாகவே இருந்தாலும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவ வசதிகள் மிக மிகக் குறைவு. இங்கிருக்கும் ஒன்றிரண்டு மருத்துவமனைகளும் கொரோனாத் தொற்று காரணமாக இயங்குவதில்லை. நாட்டின் நிர்வாகம் தம்மாலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நோய்த்தொற்று அதிகமாகும் போது எல்லோருக்கும் மருத்துவம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.

இந்த நிலையில் தங்கள் மூலமாக கீழ்க்கண்ட உதவிகளை மத்திய மாநில அரசுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம்: ஊரடங்கு முடிந்தவுடன் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியா திரும்ப எதுவாக மத்திய அரசானது சிறப்பு விமானங்கள் தரையிறங்க வசதியாக மாநில வாரியாக சில விமான நிலையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பெண்கள்,குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு நாடு திரும்ப சொந்த செலவில் விமானக் கட்டணம் செலுத்தி சிறப்பு விமானம் மூலம் வர விரும்பும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கும் அனுமதியைத் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும்.

காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காங்கோ குடியரசு மற்றும் இன்னபிற மருத்துவவசதிகள் குறைவான ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகம் திரும்ப தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். விமானக்கட்டணம் அளிக்க முடியாதவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டும். நாடு திரும்பும் தமிழர்களுக்குத் தேவையான கொரோனா சோதனை, தனித்து வைத்தல் மற்றும் மருத்துவ வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட தமிழர்களின் உயிர்காக்க உதவி புரியவேண்டுகிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த கடிதத்தை ரவிக்குமார், இதை அனுப்பிய சௌந்தரராசன் என்பவரிடம் போனில் பேசியுள்ளார்.. பத்திரமாகவும், பாதுகாப்பாக இருக்குமாறும் அவர்களை கேட்டுக் கொண்டதுடன், விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. காங்கோவில் சிக்கியுள்ளவர்கள் நாடு திரும்ப மீட்பு நடவடிக்கையை தமிழக அரசும், மத்திய அரசும் விரைந்து எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ரவிக்குமார் எம்பி வலுவாக முன்வைத்துள்ளார்!!

English summary
coronavirus: 350 tamil people suffered in congo african country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X