சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழைகளுக்கு உடனே நிவாரணம் வழங்குக.. மத்திய அரசுக்கு சிபிஎம் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி கொண்டிருக்கிற ஏழை எளிய மக்கள், உழைப்பாளிகள், சிறு குறு நடுத்தர தொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களையும் பாதுகாப்பதற்கான நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முழுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த, நோயை கட்டுப்படுத்தவும் நாடு முழுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Coronavirus: Government should help poor economically says CPM K Balakrishnan

மக்கள் இதனால் கடுமையாக நிதி நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பொருளாதார பாதிப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், இந்திய வருவாய்த் துறையில் (IRS) பணியாற்றும் சில இளம் அதிகாரிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசுக்கு உள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, சில புதிய ஆலோசனைகளைத் தெரிவித்துள்ளார்கள். காரண காரியங்களோடு இவற்றை ஏற்பதும் மறுப்பதும் மத்திய அரசின் பொறுப்பு.

ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், கடும் கோபத்தோடு, இவர்களது செயல் பொறுப்பற்ற செயல், இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, கொரோனா தாக்கத்தில் நாடு சிக்கியுள்ள நிலையில் இது உள்நாட்டு குழப்பம் விளைவிக்கும் செயல் என விமர்சித்ததோடு நிற்காமல், அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

பாஜக அரசால் ரத்து செய்யப்பட்ட செல்வ வரியை மீண்டும் கொண்டு வரலாம் என்பன போன்ற ஆலோசனைகள் கடந்த காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஏற்கனவே, போதுமான முன்னேற்பாடு இல்லாமல் வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட சமூகப் பொருளாதார நெருக்கடிகள் அனைத்துப் பகுதி மக்களையும் திணற வைத்துக் கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் பசியும், பட்டினியும், வேலையின்மையும் விலைவாசி உயர்வும் வரலாறு காணாத சோகத்தை உருவாக்கியுள்ளது.

27 வயதுதான்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை.. திடீர் பலி.. சென்னையை உலுக்கிய ஒரு மரணம்! 27 வயதுதான்.. எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை.. திடீர் பலி.. சென்னையை உலுக்கிய ஒரு மரணம்!

இதனைச் எதிர்கொள்ளத் தேவையான ஆக்கபூர்வமான நிவாரண நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள மறுத்து வருகிறது. மாநிலங்களுக்கும் போதுமான உதவி அளிப்பது கிடையாது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பல்வேறு வகையினங்களில் மத்திய அரசு அளிக்க வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளது.

உலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கூடுதல் வரி போடுகிற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதே முறைகளை ஏன் இந்தியாவில் மேற்கொள்ளக் கூடாது? அத்தகைய ஆலோசனைகள் மீது ஏன் கோபம் கொள்ள வேண்டும்? கார்ப்பரேட்டுகளின் மீது கைவைக்க மனம் இல்லாது, பாஜக அரசின் வர்க்க பாசம் தடுக்கிறது.

எனவேதான், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் இருந்து நிதி திரட்ட முனைகிறது. பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியத்தைக் கூட, மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கவிடாமல் பிரதமர் பெயரில் உள்ள அறக்கட்டளைக்கு அளிக்க வற்புறுத்தி வருகிறது. அந்தந்த மாநிலத்தில், அவரவர் தொகுதிகளில் செலவழிக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியையும் இரண்டு ஆண்டுகளுக்கு மடைமாற்றம் செய்துவிட்டது.
இத்தகைய சூழலில் வரி வருவாயை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை பரிசீலிக்க மறுப்பதும், ஆலோசனை அளித்தவர்களை மிரட்டுவதும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும்.

வரி வருவாய் பிரதானமாக எங்கிருந்து வருகிறது, பிரதானமாக யாருக்கு செலவழிக்கப்படுகிறது என்பதில்தான் ஒரு அரசாங்கம் யாருக்காக செயல்படுகிறது என்பதைக் காண முடியும். கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கி பழக்கப்பட்ட மோடி அரசு, நெருக்கடி காலத்தில் அவர்களின் கொள்ளை லாபத்தில் சிறு பகுதியை எடுப்பது என்று சொன்னாலே பதட்டம் அடைவது, 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இச்சூழலில், ஆலோசனைகள் வழங்கிய அதிகாரிகள் மீதும் அவர்களுக்கு தவறாக வழிகாட்டியதாகக் கூறி சில அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு விட்டு, அவர்களது ஆலோசனைகளை பரிசீலிக்க வேண்டும்.

தமிழகத்திற்கான நிதி நிலுவைகளை உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும்; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக போதுமான நிதி வழங்கப்பட வேண்டும்; மாநிலங்களின் கடன் வாங்கும் உச்சவரம்பை உயர்த்திட வேண்டும்; பாதிப்புக்கு உள்ளாகி கொண்டிருக்கிற ஏழை எளிய மக்கள், உழைப்பாளிகள், சிறு குறு நடுத்தர தொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களையும் பாதுகாப்பதற்கான நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Coronavirus: The government should help poor economically says CPM Gen Secreatary K Balakrishnan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X