சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிக்கலில் பொருளாதாரம்.. இக்கணம் தேவை சிக்கனம்.. ஒரு இல்லத்தரசியின் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பொருளாதார சிக்கல் குறித்து நமது வாசகர்கள் தொடர்ந்து எழுதி வருகின்றனர். இந்த வரிசையில் நமக்கு வந்த மிக நீளமான ஒரு கடிதம் இது..

நமது வாசகர் ஏ.காயத்ரி எழுதியுள்ள இந்த கடிதத்தின் விவரம், அப்படியே அவரது வார்த்தைகளில் :

பொருளாதாரம் என்ற உடன் ஏதோ ஒரு பெரிய விஷயம் என்று நினைத்தேன். சற்றே யோசித்துப் பார்த்தால் எல்லாமே நம்மில் இருந்துதான் உருவாகிறது. இன்று எங்கு பார்த்தாலும் கொரோனா எதிலும் கொரோனா ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் கொரோனாவை குழிதோண்டிப் புதைக்கவா முடியும்? சாத்தியமல்ல.

இது ஒரு பக்கம் நம்மை மிரட்டி கொண்டிருக்க, உனக்கு நான் சளைத்தவன் அல்ல என்று விலைவாசி உயர்வு வேறு மக்களை குழம்ப வைத்துள்ளது. இந்த இரண்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. தொடர் புள்ளி வைத்து சேர்ந்தே பயணித்தாக வேண்டும். காலத்தின் கட்டாயம் என்று நாம் செய்த பாவத்திற்கு சம்பளமாக இந்த சாபம் நம்மை தொற்றிக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் சலிப்படைய கூடாது. அதற்கு பதில் சாமர்த்தியமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அத்தியாவசியத் தேவைக்கு இன்று நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரம் வீட்டிலிருந்தே உருவாகிறது.

 Coronavirus Impact On Economy: Let us save the money and raise to the occasion

அத்தியாவசிய தேவையான உணவு உடை இருப்பிடம் இவை மூன்றின் தேவை அதிகமாகும் போதே பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.நம்மை தொற்றிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் நாமே காரணம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை எப்போது மறந்தோமோ... மறுத்தோமோ... அப்போதே அழிவிற்குள் காலடி எடுத்து வைத்து விட்டோம் இதனை மறுக்க முடியாது.

குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆணும் பெண்ணும் வேலைக்கு செல்லும் சூழலே நிலவுகிறது. இன்றைய கொரோனா அனைவரின் வாழ்க்கையும் முடக்கி வீட்டிற்குள் முடங்க வைத்துள்ளது. இந்தச் சூழலில் எழுந்ததுதான் விலைவாசி உயர்வு. இதை எப்படி சமாளிப்பது, வேலையின்றி சம்பளம் இன்றி மக்கள் படும்பாடு சொல்லி புரியாது நடந்ததெல்லாம் இருக்கட்டும். இனியாவது வருங்காலத்தை மனதில் கொண்டு வீட்டில் சிக்கனத்தை கையாண்டு பொருளாதாரத்தை காக்க முயல்வோம்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்று பேருக்கு யாரும் சொல்லி வைக்கவில்லை. ஒரு கூற்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும். இவ்வாறாக இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டுவர ஒவ்வொரு வீட்டிலும் பெண்களாகிய நாம் தான் புது முறைகளைக் கையாள வேண்டும். எப்படி நாட்டை காக்க ராணுவ வீரர்கள் போராடுகிறார்களோ அதேபோல் இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் காக்கும் மிகப்பெரிய கடமை நம் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சிக்கனத்தை ஆயுதமாக எடுத்து பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நாட்டை முன்னேற்ற வேண்டும்.

எங்கெல்லாம் சிக்கனம் தேவை?

குடும்பம் என்பது உணவு உடை இருப்பிடம் சார்ந்தே உள்ளது. இதில் எங்கெல்லாம் சிக்கனம் தேவை என்பதை வீட்டில் தலைவியாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சொந்த இருப்பிடம் என்பது அனைவருக்கும் சாத்தியமல்ல. நடுத்தர மக்கள் பலர் தங்கள் வாழ்க்கையை வாடகை வீட்டில்தான் கழிக்கின்றனர். வாடகை கொடுத்து ஆகவேண்டும். சொந்த வீடு இல்லாதவருக்கு வாடகை என்பது ஒருசெலவுதான். இந்த செலவுக்கு மற்ற செலவுகளை ஈடுகட்ட வேண்டும் .

 Coronavirus Impact On Economy: Let us save the money and raise to the occasion

அடுத்ததாக எடுத்துக்கொண்டால் உடை மனிதனுக்கு அத்தியாவசிய தேவை. இன்றைய காலகட்டத்தில் துணிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அடிக்கடி துணி வாங்கும் உடை பிரியர்கள் அதனை விட்டு விலகி இருக்கும் சூழல் தான் இது. இதனை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். துணிகளை வாங்கி குவிப்பதை தவிர்க்க வேண்டும். இருப்பதை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது.

வீட்டின் மிகவும் அத்தியாவசிய தேவை... உணவு ... சொல்லப்போனால் இதற்காகத்தான் மனிதன் ஓடிக் கொண்டிருக்கிறான்

சமையலறை

சமையலறை என்று எடுத்துக் கொண்டால் நாம் சிக்கனப்படுத்த வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளன.

ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட நாள் கெடாத காய்கறிகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். அதேநேரத்தில் விலை மலிவான காய்கறிகளை வாங்க வேண்டும். அதிலிருந்து உணவுகளை செய்ய நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க தனித்தனி பைகளில் சேமித்து வைக்க வேண்டும். மளிகை சாமான்கள் மாதத்திற்கு ஒரு முறை வாங்க வேண்டும். அதில் தேவைகளை குறைத்து பயன்படுத்த வேண்டும்.

 Coronavirus Impact On Economy: Let us save the money and raise to the occasion

பொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்கபொருளாதார நெருக்கடி.. நீங்க எப்படி சமாளிக்கிறீங்க.. எங்களிடம் ஷேர் பண்ணுங்க

சிக்கனமாக உணவுகளை தயார் செய்வது எப்படி?

பெண்கள் எப்போதுமே எதிலுமே புத்திசாலிகள் தான். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று ஒரு பட்டியலே உள்ளது. இதனை சிக்கனமாக மேற்கொண்டால் வாழ்க்கையை தரமாக மாற்றலாம். எப்பொழுதுமே உணவில் சிக்கனம் தேவை. கடையில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும். மேல்நாட்டு உணவு முறைகளை மாற்றி பாரம்பரிய உணவுகளை பின்பற்ற வேண்டும்.

1. இட்லி மாவு அரைத்து பயன்படுத்தலாம். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் என்றால் மிகவும் நல்லது அரசு தரும் அரிசியில் இட்லி மாவு தயார் செய்யலாம். செலவு குறைவுதான்.

2. சமையல் செய்யும்போது குக்கர் பயன்படுத்துவது நல்லது. எரிவாயு தேவையும் குறையும். தண்ணீரின் தேவையும் குறையும்.

3. விலை மலிவான கீரைகள் வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தலாம். தேங்காய் விலை வாசி உயர்வு அதிகம் என்பதால் தக்காளி, வெங்காயம் பயன்படுத்தி சட்னி செய்யலாம்.

4. வேகவைத்த உணவான இட்லி இடியாப்பம் புட்டு ஆப்பம் அடை தோசை என்ற பாரம்பரிய உணவுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இதெல்லாம் செய்ய பெரிதாக ஒன்றும் செலவாகாது. ரேஷன் அரிசியில் இவை அனைத்தையும் மிகவும் எளிதாக சிக்கனமாக செய்யலாம். செய்முறை எதுவும் தெரியவில்லை என்றால் வீட்டில் உள்ள பெரியவர்களை அணுகுவது நல்லது அல்லது சமூக வலைத்தளங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.

 Coronavirus Impact On Economy: Let us save the money and raise to the occasion

மின்சாதன பொருட்கள்

இப்பொழுது அனைவர் வீட்டிலும் ஒரு நபராக குடி கொண்டிருப்பது குளிர்சாதனப்பெட்டி குளிரூட்டி துணி துவைக்கும் இயந்திரம். இதன் பயன்பாட்டை தேவைக்கு பயன்படுத்தி சிக்கனத்தை கையாண்டால் போதும்.

1. பகல் நேரமென்றால் வீட்டின் கதவுகள் ஜன்னல்களை திறந்து வைத்தல் நல்லது. ஏசி பயன்பாட்டை குறைக்கலாம்.

2. அன்றைய துணிகளை அன்றைக்கே துவைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு கடைபிடித்தால் வாஷிங்மெஷின் தேவை குறையும் .

3. ஃப்ரிட்ஜ் எப்பொழுதுமே ஓடிக்கொண்டிருக்க வேண்டும் இல்லையேல் பொருள்கள் கெட்டுவிடும் எனவே மற்றவற்றில் சிக்கனத்தைக் கையாளவேண்டும்.

4. தண்ணீரைப் பிடித்து வைத்து பயன்படுத்த வேண்டும். அடிக்கடி மோட்டார் போடுவதை தவிர்த்தல் நல்லது. மின்சாரத்தை சிக்கனம் செய்யலாம் . தேவையில்லாமல் விளக்குகள் எரிவதை தவிர்த்தல் நல்லது.

5. எதுவும் வாங்க போக வேண்டுமென்றால் நடந்து போகும் தூரம் என்றால் நடந்தே செல்லுங்கள் பெட்ரோல் செலவு குறையும்.

குழந்தை வைத்திருப்பவர்கள் என்றால் குழந்தைகளுக்கு போடும் டயப்பர் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது. இரவு நேரங்களில் மட்டும் போட்டு விடுவது மிகவும் நல்லது. தேவையிருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் பாட்டி வைத்தியத்தை மேற்கொள்வது சிறந்தது.

 Coronavirus Impact On Economy: Let us save the money and raise to the occasion

குழந்தைகள் நொறுக்கு தீனி சாப்பிடுவதில் அலாதிப் பிரியம் உள்ளவர்கள். அதை வீட்டிலேயே செய்து கொடுக்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து சோற்று வத்தல் கூழ் வடகம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கொழுக்கட்டை அவல் பொரி, பொரி கடலை என்பவை செலவு குறைவான பொருட்கள். உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய பொருட்களும் அதுவே. பீட்சா பர்கர் என்ற மேல்நாட்டு உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை பின்பற்றியே சிக்கனத்தை கையாள்வோம்.

மஞ்சள் என்பது சிறந்த கிருமிநாசினி மஞ்சளும் வேப்பிலையும் சேர்த்து குளிப்பது மிகவும் நல்லது. முதியோர்களுக்கு அத்தியாவசியம் என்றால் மாத்திரை மருந்து. எனவே தினமும் ஒரு தொகையை அதற்கென்று எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆக சிக்கனம் என்பது நாம் மனம் வைத்தால் மட்டுமே ஏற்படும் இச்சூழல் நம்மை ஒரு வீராங்கனையாக மாற்றியுள்ளது. நாட்டின் பொருளாதாரமே நம் கையில் என்ற சூழலில் இப்போரில் வெள்ள சிக்கனம் என்ற ஆயுதத்தை கையில் ஏந்துவோம்.

பெண்கள் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்ற கூற்றை உண்மையாக்கி... கொரோனா வின் பயத்தை அழித்து நாட்டை வல்லரசாக்குவோம். பொருளாதாரத்திலும் தடுமாறாமல் தலை நிமிர்வோம்.

English summary
Our reader A Gayathri's advise to the people how to overcome the Corona related financial issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X