சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேதி எட்டியதா.. ஏன் தாமதம்.. அண்ணன், தம்பி, மதினி மிச்சமிருக்கணும்.. பிரதமருக்கு மதுரை எம்பி கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: "தற்போதைய சூழலில் பயமும் அக்கறையும் பதட்டமும் மட்டும் நிறைந்து இருக்கின்றன... அக்குரல் நெஞ்சில் அடித்து அழுங்குரலாக ஆகும் முன்னர், உங்களின் கவனத்துக்கு சிலவற்றைக் கொண்டுவர விரும்புகிறேன்" என்று கூறி எம்பி சு.வெங்கடேசன் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.. அந்த கடிதத்தில் கொரோனாவைரஸ் குறித்த 12 கேள்விகளை எழுப்பியுள்ளார்.. அந்த கேள்விகள் எல்லாம் தன்னுடைய கேள்விகள் இல்லை என்றும், கண்ணுக்குத்தெரியாத அந்த வைரஸ் சமூகத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் கேள்வி.. லட்சுமண ரேகையை மதிக்க அண்ணனும் தம்பியும் மதினியும் மிச்சமிருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எழும் கேள்வி" என்றும் வெங்கசேடன் தெளிவுபடுத்தி உள்ளார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய அந்த கடிதம் இதுதான்.. தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ் & ஆங்கிலத்தில் இந்த கடிதத்தை பதிவிட்டுள்ளார். "மாண்புமிகு இந்தியப்பிரதமர் அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம்... சவால்களும் துயரமும் ஒன்றினை ஒன்று விஞ்சிக்கொண்டிருக்கும் இந்த நாள்களில் உடனடியாக உங்களின் கவனத்துக்குச் சிலவற்றைக் கொண்டுவரவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.

coronavirus: madurai mp su venkatesan has written prime minister modi

நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் உங்களைச் சுற்றியிருக்கும் முக்கிய ஆலோசகர்கள் பல்வேறு காப்புப்பணிகளை உங்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கக் கூடும். நாட்டின் விளிம்பில் இருக்கும் சாமானியனின் ஹீனக்குரல் எனது வீட்டில் தினம் ஒலிக்க தொடங்கி உள்ளது. தென்தமிழகத்து அறிவார்ந்த சமூகத்தின் அக்கறையுடன் கூடிய குரலில் எனது தொலைபேசியில் நித்தமும் பல விசாரிப்புகள். நாடெங்கிலும் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட அத்தனை பேரினை நோக்கியும் இப்படியான கூக்குரல் இடைவிடாது எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கும். இந்தக் குரலில் தற்போதைய சூழலில் பயமும் அக்கறையும் பதட்டமும் மட்டும் நிறைந்து இருக்கின்றன. அக்குரல் நெஞ்சில் அடித்து அழுங்குரலாக ஆகும் முன்னர், உங்களின் கவனத்துக்கு சிலவற்றைக் கொண்டுவர விரும்புகிறேன்.

விமரிசிக்கவோ, வேதனைப்படுத்தவோ எண்ணி அல்ல. உண்மையை உங்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதன் மூலம் தீர்வினை நோக்கி விரைவதற்கான முயற்சியே. முகம்தெரியாத அந்தக் கிருமியை முன்னேறவிடாமல் தடுக்க முடியும் என்ற மிச்சமிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையிலே இதனை எழுதுகிறேன்.

1. "உண்மையைச் சொல்லுவதும் பிற தேசத்தில் நிகழ்ந்த மருத்துவ நெருக்கடி அனுபவங்களை பகிர்தலும்" மட்டுமே நம்மைக் காக்கும் என்பது இங்கிலாந்து, அமெரிக்க முன்னோடி மருத்துவ ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. இங்கே, இப்போது சொல்லப்படுபவை உண்மையான புள்ளிவிவரங்களா?

2. இந்தியா ஏன் இன்னமும் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இறங்க மறுக்கிறது? "Test, test, test" இதுதான் தீர்வு என பல நாடுகள் சொன்ன பின்னரும் இங்கு ஏன் பலருக்கும் சோதனை அவசியமில்லாதது போன்ற நிலை? தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் நோயை முடக்கியது சோதனையால்தான் என்கிற சேதி உங்களை எட்டவில்லையா?

3. நமக்கு அருகிலுள்ள நாடு 10,00,000 பேருக்கு 6800 பேரினை சோதனை செய்யும்போது நாம் வெறும் 18பேரைத்தான் சோதிக்கின்றோம். ஆரம்பத்தில் ICMR அனைவருக்கும் 'சோதனை தேவையில்லை' என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இப்பொழுது அது 'அதிகம் பேருக்கு சோதிக்கலாம்' என்ற நிலைப்பாட்டிற்கு வந்த பின்னரும் போதிய அளவு டெஸ்டிக் கிட் வந்த பின்னரும் ஏன் இன்னும் தாமதம் பிரதமர் அவர்களே?

coronavirus: madurai mp su venkatesan has written prime minister modi

4. ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இந்தியாவில் "25 கோடிமக்கள் தொற்றுப் பெறுவர். 25 இலட்சம் பேர்வரை நோயுறலாம்; மருத்துவம் தேவைப்படலாம்" என்கின்றனர். நம்மிடம் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகள், உபகரணங்கள் ஆகிய எந்த ஒன்றிலும் இதை மீட்டெடுக்கும் எண்ணிக்கை இல்லையே. இந்நிலையில் என்ன செய்யப்போகிறோம்? இந்த ஆய்வுக்கும் புள்ளிவிபரங்களுக்கும் அர்த்தமேதுமில்லை என்று விட்டுவிடப்போகிறோமா அல்லது அதற்கு முகங்கொடுக்கப் போகிறோமா? இதனைப்பற்றி அரசு எதுவும் சொல்லவில்லையென்றால் எப்படித்தான் புரிந்துகொள்வது?

5. பிற நோய்களில் கவனம் குறைவதும், அந்த நோய்களுக்கான புற நோயாளி சிகிச்சை நிலையங்கள் மூடப்படுவதும் எவ்வளவு ஆபத்து? நமது நாட்டில் காய்ச்சலில் ஏற்படும் மரணத்தைவிட வாழ்வியல் நோயில் ஏற்படும் மரணங்கள்தானே நான்கு மடங்கு அதிகம்?

6. தனியார் மருத்துவமனைகள் இன்னமுமே முன்வர தயங்கித் தடுமாறுவதை உணர முடிகிறது. நீங்கள்தானே அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்த மட்டில் 1750 வெண்டிலேட்டர்கள் அரசிடம் என்றால், 465 தனியாரிடம் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பலமும் கட்டமைப்பும்கொண்ட தனியார் மருத்துவமனைகளை கரோனாவுக்கு எதிரான அரசின் செயல்திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டாமா?

7. நேற்றைய தினம் ஆயுஷ் துறையினரிடம் பேசியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். சீனம் வுகானுக்கு மட்டும் 2000 சீனமுறை மரபு மருத்துவர்களை அனுப்பியதும் அவர்களது QPD கசாயம் முதலுதவி செய்ததும் பதிவாகி உள்ளதே, நிலவேம்போ, கபசுரகுடினீரோ அவர்கள் சொல்வதை அறிஞர் கூட்டத்தைக்கொண்டு ஆலோசித்து நாடெங்கும் ஊற்றி நம்பிக்கையைக் கொடுங்களேன். வலியுடன் காத்திருக்கும் கூட்டத்துக்கு அக்கசாயம், நோய் எதிர்ப்பாற்றலை மட்டுமன்று பெரிய உளவியல் உறுதியையும் சேர்த்தல்லவா தரும்?

8. "வராது; வந்தால் பார்த்துக் கொள்ளலாம்" என்ற வரிகள் அழும் குழந்தைக்கு நிலவைக் காட்டி உறங்க வைக்கும் போக்கு. சில நேரங்களில் ஊடகம் மூலம் நாங்கள் பெறும் செய்தி அப்படித்தானே உள்ளது. வெகுசனத்தின் வலி அவர்கள் மூளைக்கு எட்டும் முன்னரே அவர்கள் மனத்தை எட்டி முரணான நடவடிக்கைகளுக்கு முன்னேற வைத்துவிடும் என்பதை அறிவீர்கள்தானே! முன்வரிசைக் காவலர்களாய் உள்ள 7இலட்சம் மருத்துவர்களின் எண்ணிக்கை பத்தாது என்றால் 2.25 இலட்சம் ஆயுஷ் மருத்துவர்களையும் சேர்த்து முதல் நிலை பாதுகாப்பிற்கு நிறுத்தலாமே!

9. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அதிபர் ஜீ ஜின்பிங் உடன் நீண்ட உரையாடலை நடத்தியதாகவும், இந்த வைரஸ் பற்றிய வலுவான புரிதலை சீனா வைத்திருப்பதாகவும் அந்த நாட்டோடு இணைந்து பணியாற்றுவோம் என நேற்று முன் தினம் தெரிவித்துள்ளார். சீனாவின் அனுபவங்களை நாமும் ஏன் பரிமாறிக் கொண்டு இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது என்பதையும் தாங்கள் உடனடியாக பரிசீலிக்க வேண்டும். "சீன வைரஸ்" என முதலில் சாடிய டிரம்ப் இன்று இறங்கி வந்து அமெரிக்க மக்களை காப்பதற்கு சீன அனுபவம் தேவை என்ற நிலை எடுக்கும் போது மாமல்லபுரத்தில் இந்திய- சீன நல்லுறவுக்கான பெரும் நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ள சூழலில் நீங்கள் அத்தகைய முன் முயற்சியை மேற்கொள்ளலாமே.

10. நான்கு மணிநேர அவகாசத்தில் ஊரடங்கை அறிவித்துவிட்டீர்கள். எந்த முன்னேற்பாட்டினையும் அரசின் எந்த துறையும் செய்திராத பொழுது, தனிமனிதன் என்ன செய்திருக்கமுடியும்? உங்கள் அமைச்சகத்தில் உள்ள வாகன ஓட்டுநர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்கெங்கு சிக்கினார்கள் என்பதைக் கேட்டாலே போதுமே? நிலமையின் விபரீதம் முழுமையும் புரியும். தில்லியின் ஆனந்த விகாரிலும் காசர்கோட்டின் தொழிற்கூடத்திலும் ஶ்ரீபெரும்புதூரின் ஊர் விளிம்புகளிலும் சொந்த ஊர்க்கு எப்படித் திரும்புவது என விழிபிதுங்கி ஒட்டிய வயிறுடன் இலட்சக்கணக்கானோர் நிற்கின்றனரே. ஒட்டிய வயிற்றில் ஒருவேளை அந்த பாதகக் கிருமியும் ஒட்டியிருந்தால் இந்த பரவல் தடுப்பு உத்தியே பாதாளத்துக்குப் போய்விடுமே! உங்கள் ஆலோசனைக்குழு என்ன செய்யப்போகின்றது?

coronavirus: madurai mp su venkatesan has written prime minister modi

11. நாற்பத்தி ஐந்து கோடி இந்தியர்கள் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பவர்கள். அவர்களின் கால்களை வயிற்றோடு இறுக கட்டும் முடிவை நீங்கள் அறிவித்தபோது, அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி எத்தனை நூறு கேள்விகளுக்கு உங்களின் அமைச்சகம் விடைகண்டறிந்திருக்க வேண்டும். ஆனால் எந்த விடையையும் நீங்கள் இன்றுவரை சொல்லவில்லையே. காட்டுத்தீ எரியத்தொடங்கும் போது மெளனம் எனும் காற்று நெருப்பை அணைக்காது; அதிகப்படுத்தவே செய்யும்.

12. தினம் முன்நின்று விஷயங்களைப் பகிரவேண்டிய அரசின் முதன்மை நலவாழ்வுச் செயலரும் மருத்துவ அமைச்சரும் ஓரிரு மணித்துளிகளேனும் வெற்றுச்சொற்களைக் கோர்த்து பேசி நகராமல் விவரங்களையும் வியூகங்களையும் திடமாய்ப் பேசி மக்களை நித்தம் பாதுகாப்பாய் அரவணைக்க வேண்டாமா?

இவையெல்லாம் எதிர்கட்சி உறுப்பினராகிய எனது கேள்விகளல்ல, கண்ணுக்குத்தெரியாத அந்த வைரஸ் சமூகத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் கேள்வி... லட்சுமண ரேகையை மதிக்க அண்ணனும் தம்பியும் மதினியும் மிச்சமிருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எழும் கேள்வி" என்று எழுதியுள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான கமெண்ட்களும், வரவேற்புகளும் குவிந்து வருகின்றன. சாமான்யனின் சந்தேகங்களை எம்பி கேட்டுள்ளதாகவும் பதிவுகள் விழுந்தபடியே உள்ளன.

English summary
coronavirus: madurai cpm mp writes letter to pm narendra modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X